புதிய மாவட்டமாக உதயமான பிறகு முதல் சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் ‘தென்னகத்தின் ஸ்பா’: தென்காசி


புதிய மாவட்டமாக உதயமான பிறகு முதல் சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் ‘தென்னகத்தின் ஸ்பா’: தென்காசி
x
தினத்தந்தி 5 March 2021 6:30 AM GMT (Updated: 5 March 2021 6:30 AM GMT)

நெல்லை மாவட்டத்தில் இருந்து பிரித்து தென்காசி புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டு உள்ளது. மாவட்டம் பிரிக்கப்பட்டதற்கு பிறகு தென்காசி சட்டசபை தொகுதி முதலாவது சட்டமன்ற தேர்தலை சந்திக்கிறது.

‘தென்னகத்தின் ஸ்பா’
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் சூழ்ந்த குற்றாலம் அருவிகள் தென்காசி தொகுதியில் அமைந்துள்ளது. ‘தென்னகத்தின் ஸ்பா’ என்று அழைக்கப்படும் குற்றாலத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதால், சுற்றுலாத்துறை பெரும் வளர்ச்சி அடைந்து வருகிறது.

‘தென்னகத்தின் காசி’ என்று அழைக்கப்படும் காசி விசுவநாத சுவாமி கோவிலும் தென்காசியில் அமைந்துள்ளது. பாவூர்சத்திரம், சுரண்டை பகுதியில் விளைவிக்கப்படும் காய்கறிகள், கேரள மாநிலத்துக்கு தினமும் ஏராளமான வாகனங்களில் அனுப்பி வைக்கப்படுகின்றன. இதனால் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்கள் பெரிதும் பயனடைகின்றனர். விவசாயத்துக்கு அடுத்தாற்போன்று மர அறுவை ஆலை தொழிலும் இங்கு சிறந்து விளங்குகிறது. பெரும்பாலான பெண்கள் பீடி சுற்றும் 
தொழிலாளர்களாகவும் உள்ளனர். செங்கல்சூளைகளும் கணிசமாக உள்ளன. தற்போது மென்பொருள் துறையும் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.

வாக்காளர்கள்
தென்காசி சட்டமன்ற தொகுதியில் தென்காசி, வீரகேரளம்புதூர் ஆகிய தாலுகாக்களும், தென்காசி நகரசபையும், குற்றாலம், சுரண்டை, சுந்தரபாண்டியபுரம், இலஞ்சி, மேலகரம் ஆகிய நகர பஞ்சாயத்துகளும், தென்காசி, கீழப்பாவூர் ஆகிய யூனியன்களும் அமைந்துள்ளன.

தென்காசி சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 42 ஆயிரத்து 974 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 48 ஆயிரத்து 532 பெண் வாக்காளர்களும், 18 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 2 லட்சத்து 91 ஆயிரத்து 524 வாக்காளர்கள் உள்ளனர்.

7 முறை வென்ற காங்கிரஸ்
இதுவரையிலும் நெல்லை மாவட்டத்துடன் இணைந்து தென்காசி தொகுதி 15 முறை சட்டமன்ற தேர்தலை சந்தித்துள்ளது. இதில் காங்கிரஸ் 7 முறையும் (1952, 1962, 1967, 1977, 1984, 1989, 1991), அ.தி.மு.க. 3 முறையும் (1980, 2001, 2016), தி.மு.க. 2 முறையும் (1971, 2006), சமத்துவ மக்கள் கட்சி (2011), த.மா.கா. (1996) ஆகியவை தலா ஒரு முறையும் வென்றுள்ளது. இங்கு 1957-ம் ஆண்டு சுயேச்சையாக போட்டியிட்ட சட்டநாத கரையாளர் வென்றுள்ளார்.

கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலில் தென்காசி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட செல்வமோகன்தாஸ் பாண்டியன் 86 ஆயிரத்து 339 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் 85 ஆயிரத்து 877 வாக்குகள் பெற்று 462 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

தரம் உயர்த்த வேண்டும்
தென்காசி தொகுதியில் சுற்றுலா துறையை சார்ந்த விடுதிகள், வணிக வளாகங்கள் அதிகளவில் உள்ளன. ஆனாலும் படித்த இளைஞர்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கி தரும் வகையில் பெரிய தொழிற்சாலைகள் இல்லை. எனவே, தொழிற்சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாவட்ட தலைநகராக உருவான பின்னரும் தென்காசி அரசு ஆஸ்பத்திரி தரம் உயர்த்தப்படவில்லை. எனவே, கூடுதல் டாக்டர்கள், மருத்துவ பணியாளர்களை நியமித்தும், நவீன மருத்துவ உபகரணங்களை வழங்கியும், அரசு ஆஸ்பத்திரியை தரம் உயர்த்த வேண்டும்.

புறவழிச்சாலை திட்டம்
தென்காசியில் போக்குவரத்து நெருக்கடியை தீர்க்க, புறவழிச்சாலை திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனாலும் பணிகள் தொடங்காமல் கிடப்பில் போடப்பட்டது. எனவே, புறவழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

குற்றாலத்தில் உள்ள அரசு விடுதிகள் பராமரிப்பற்று பழுதடைந்த நிலையில் உள்ளன. அவற்றை புதுப்பித்து முறையாக பராமரிக்க வேண்டும். குற்றாலத்தை உலக வரைபடத்தில் இடம் பெறச்செய்யும் வகையில் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை தொகுதி மக்கள் முன்வைத்து உள்ளனர். எனினும் புதிய மாவட்டத்தில் முதல் சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் தென்காசி ெதாகுதியை கைப்பற்றப்போவது யார்? அந்த தொகுதியில் முதல் எம்.எல்.ஏ. யார்? என்பதை அறிய மே மாதம் 2-ந் தேதி வரைக்கும் காத்திருக்க வேண்டும்.

பயோடேட்டா
மொத்த வாக்காளர்கள் - 2,91,524

ஆண்கள் - 1,42,974

பெண்கள் - 1,48,532

மூன்றாம் பாலினத்தவர்கள் - 18


Next Story