அதிமுகவின் வரைவு தேர்தல் அறிக்கை தயார்: ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைப்பு


அதிமுகவின் வரைவு தேர்தல் அறிக்கை தயார்: ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 5 March 2021 5:21 PM GMT (Updated: 2021-03-05T22:51:47+05:30)

அதிமுக வேட்பாளர் பட்டியல் முழுமையாக வெளியிட்ட பின்னரே தேர்தல் அறிக்கை வெளியிட அக்கட்சி தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி பிரதான கட்சியான அ.தி.மு.க. சார்பில் கடந்த மாதம் 24-ந்தேதி முதல் வேட்பாளர் விருப்ப மனு வினியோகிக்கப்பட்டு வருகிறது. விருப்ப மனு வினியோகம் 3-ந்தேதியுடன் முடிவடைந்தது.

அ.தி.மு.க. வேட்பாளர் நேர்காணல், ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று  நடந்தது.இதில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் அ.தமிழ் மகன் உசேன், செய்தி தொடர்பாளர் பா.வளர்மதி, மருத்துவரணி செயலாளர் டாக்டர் பி.வேணுகோபால் உள்பட நிர்வாகிகள் அடங்கிய ஆட்சி மன்ற குழு, தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தவர்களுடன் நேர்காணல் நடத்தியது.

8200 பேரை 15 பிரிவுகளாக பிரித்து நேர்காணல் நடைபெற்றது.  காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த நேர்காணல் இரவு 8.30 மணிக்கு முடிவடைந்தது. அதனைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்பட ஆட்சி மன்றக்குழு நிர்வாகிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

வேட்பாளர் நேர்காணல் நிகழ்வு முடிந்தநிலையில்,  அ.தி.மு.க.வின்  முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியானது. அதில் முதல் - அமைச்சர்  எடப்பாடி பழனிசாமி. துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்பட 4 அமைச்சர்கள் இடம் பெற்று உள்ளனர். 

எஸ்.பி., சண்முகநாதன் ஸ்ரீவைகுண்டம் , நிலக்கோட்டை எம்எல் ஏ., தேன்மொழி அதே தொகுதியிலும் போட்டியிட உள்ளனர். இதனிடையே அ.தி.முக..வின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் தேர்தல் அறிக்கை தயார் செய்து முதல் - அமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதல் - அமைச்சர் பன்னீர்செல்வத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் அ.தி.மு.க., வேட்பாளர்கள் பட்டியல் முழுமையாக வெளியிடப்பட்ட பின்னர் தேர்தல் அறிக்கை வெளியிட அ.தி.மு.க. தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story