என்னை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம்; ஸ்டாலின் வீட்டின் கேட்டை கூட தொட முடியாது -முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி


என்னை எப்போது வேண்டுமானாலும்  சந்திக்கலாம்;  ஸ்டாலின் வீட்டின் கேட்டை கூட தொட முடியாது -முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி
x
தினத்தந்தி 1 April 2021 10:01 AM GMT (Updated: 1 April 2021 10:01 AM GMT)

நான் உங்களில் ஒருவன், எப்போது வேண்டுமானால் என்னை சந்திக்கலாம். ஸ்டாலின் வீட்டின் கேட்டை கூட தொட முடியாது என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

கூடலூர்

நீலகிரி மாவட்டம் கூடலூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பொன்.ஜெயசீலனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:-

ஜெயலலிதாவுக்கு பிடித்தமான மாவட்டம் நீலகிரி. இதை தனது சொந்த மாவட்டமாக கருதியதால், இது பெருமையான மாவட்டமாகும். ஜெயலலிதாவும் இந்த மாவட்டத்துக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளார்.

தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடந்து வருகிறது. இதனால், சாதி, மத மோதல்கள் இல்லை. பிரச்சினைகள் வந்தால் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுகிறது.

திமுக ஆட்சியில் கடுமையான மின் வெட்டு, அதனால் வேளாண் உற்பத்தி பாதிக்கப்பட்டது. ஆனால், தற்போது தமிழகம் மின் மிகை மாநிலமாக மாறியுள்ளது

கல்வி தரம் உயர்ந்துள்ளது. திமுக இதை எல்லாம் செய்யவில்லை. சிறந்த நிர்வாகம், ஏராளமான புதிய திட்டங்களால் தமிழகம் வெற்றி நடை போடுகிறது. இதனால் நாட்டிலேயே தமிழகம் முன் மாதிரி மாநிலமாக திகழ்கிறது.

அதிமுக மறுபடியும் ஆட்சிக்கு வந்த உடன் பெண்களுக்கு மாதம் ஆயிரத்து 500 ரூபாய் மற்றும் இலவச வாஷிங் மெஷின் வழங்கப்படும்.

நான் உங்களில் ஒருவன், எப்போது வேண்டுமானால் என்னை சந்திக்கலாம். ஸ்டாலின் வீட்டின் கேட்டை கூட தொட முடியாது".

அதிமுக அரசுக்கு எதிராக மு.க.ஸ்டாலின் பொய் பிரச்சாரங்கள் மேற்கொள்வதாகக் குற்றம்சாட்டிய முதலமைச்சர், தேர்தலில் மக்கள் திமுகவினருக்கு உரிய பதில் அளிப்பார்கள் என கூறினார்.

Next Story