10 ஆண்டுகளுக்கு பிறகு எதிர்க்கட்சி வரிசையில் அமருகிறது அதிமுக


10 ஆண்டுகளுக்கு பிறகு எதிர்க்கட்சி வரிசையில் அமருகிறது அதிமுக
x
தினத்தந்தி 2 May 2021 7:11 PM IST (Updated: 2 May 2021 7:11 PM IST)
t-max-icont-min-icon

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் இரண்டாம் இடம் பெற்ற அதிமுக,10 ஆண்டுகளுக்கு பிறகு எதிர்க்கட்சி வரிசையில் அமர்கிறது.

சென்னை,

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடந்தது. திமுக கூட்டணி 156 இடங்களையும், திமுக தனியாக 124 இடங்களையும் முன்னிலை பெற்று ஆட்சியமைக்க உள்ளது. அதன் தலைவர் ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்க உள்ளார்.

இந்நிலையில் இரண்டாம் இடத்தில் அதிமுக கூட்டணி 78 இடங்களைப் பெற்றுள்ளது. அதிமுக மட்டும் 68 இடங்களைப் பெற்றுள்ளது. இதனால் அதிமுக எதிர்க்கட்சி வரிசையில் அமர உள்ளது. அதன் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவராக அமர்வாரா? அல்லது ஓபிஎஸ் எதிர்க்கட்சித் தலைவராக அமர்வாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது. அதுகுறித்து அதிமுக தலைமை விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்பது கேபினட் அந்தஸ்துள்ள பதவி என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுக சார்பில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் பழனிசாமி 92,868 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றார். தமிழகத்தில் அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக முன்னிருத்தப்பட்ட பழனிசாமி, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டார். 

காலையில் ஓட்டு எண்ணிக்கை துவங்கியதில் இருந்து முதல்வர் பழனிசாமி தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார். இதில், 92,868 ஓட்டு வித்தியாசத்தில் திமுக.,வின் சம்பத்குமாரை தோற்கடித்து வெற்றிப்பெற்றுள்ளார். இதன்மூலம் எடப்பாடி தொகுதியில் 6 வது முறையாக போட்டியிட்ட பழனிசாமி, 5 வது முறையாக வென்றுள்ளார்.

Next Story