வயநாட்டில் நோரோ வைரஸ் தொற்று... அறிகுறிகள் என்னென்ன..?


வயநாட்டில் நோரோ வைரஸ் தொற்று... அறிகுறிகள் என்னென்ன..?
x
தினத்தந்தி 12 Nov 2021 6:36 PM GMT (Updated: 12 Nov 2021 6:36 PM GMT)

நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.

திருவனந்தபுரம்,

கேரளாவில் வயநாடு மாவட்டத்தில் நோரோ வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். மேலும் மக்கள் விழிப்புடன் இருக்கவும் அறிவுறித்தியுள்ளார்.

வீணா ஜார்ஜ் தலைமையில் கேரள சுகாதாரத் துறையினர் வயநாட்டில் தொற்றின் தீவிரத்தை ஆராய்ந்தனர். இது குறித்து கூறிய மந்திரி வீணா ஜார்ஜ், 'தற்போது கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை, ஆனால் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். சூப்பர் குளோரினேஷன் உள்ளிட்ட நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. குடிநீர் ஆதாரங்கள் சுகாதாரமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்' என்று கூறினார்.

மேலும் அவர், முறையான தடுப்பு மற்றும் சிகிச்சை மூலம், நோயை விரைவில் குணப்படுத்த முடியும். எனவே, நோய் மற்றும் அதன் தடுப்பு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வுடன் அனைவரும் இருக்க வேண்டும் என்று கூறினார்.

நோரோ வைரஸ் என்பது இரைப்பை குடல் நோயை ஏற்படுத்தும் ஒருவகை வைரஸ்களின் குழுவாகும். இந்த வைரஸ் வயிறு மற்றும் குடல் வீக்கத்தையும், கடுமையான வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கையும் ஏற்படுத்துகிறது. ஆரோக்கியமாக இருக்கும் மக்களுக்கு நோரோ வைரஸ் பாதிப்பு ஏற்படாது. இந்த வைரஸ் தொற்று இளம் குழந்தைகளையும் வயதானவர்களையும் பாதிக்கிறது.

வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, வாந்தி, குமட்டல், காய்ச்சல், தலைவலி மற்றும் உடல்வலி ஆகியவை நோரோ வைரஸ் தாக்குதலின் அறிகுறிகளாகும். அசுத்தமான தண்ணீர் மற்றும் உணவு மூலமாகவும், பாதிக்கப்பட்ட நபர்களுடனான நேரடி தொடர்பு மூலமாகவும் இது பரவுகிறது. 

இந்த நோய் வராமல் இருக்க ஒவ்வொரு முறை உணவு உண்பதற்கு முன்னதாகவும் கைகளை சோப்பால் நன்கு கழுவ வேண்டும். விலங்குகளிடம் பழகுபவர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

Next Story