விமானத்தில் நடுவானில் மயக்கமடைந்த பயணி...! முதலுதவி அளித்த மத்திய மந்திரி


விமானத்தில் நடுவானில் மயக்கமடைந்த பயணி...!  முதலுதவி அளித்த மத்திய மந்திரி
x
தினத்தந்தி 17 Nov 2021 12:37 PM IST (Updated: 17 Nov 2021 12:37 PM IST)
t-max-icont-min-icon

மத்திய நிதித்துறை இணை மந்திரி பகவத் காரத், மயக்கமடைந்த பயணிக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார்.

மும்பை,

டெல்லியில் இருந்து மும்பைக்கு இண்டிகோ விமானத்தில் பயணித்த மத்திய நிதித்துறை இணை மந்திரி பகவத் காரத்,  திடீர் என மயக்கமடைந்த பயணிக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார். 

பகவத் காரத், ஒரு குழந்தை அறுவை சிகிச்சை நிபுணர் ஆவார், அவர் மும்பையில் உள்ள கே.இ.எம். மருத்துவமனையில் மருத்துவம் படித்தவர். 

நேற்று பகவத் காரத் டெல்லியில் இருந்து மும்பைக்கு அதிகாலை விமானத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதிகாலை 2 மணியளவில், விமானப் பணிப்பெண் அவசர மருத்துவ சிகிச்சைக்கு டாக்டர் உதவி தேவை என அறிவித்தார். 

இந்த நிலையில், விமானப் பணிப்பெண்ணிடம் பிரச்சினையைப் பற்றி கேட்டறிந்த பகவத் காரத் பாதிக்கப்பட்ட நபருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கச் சென்றார். 45 வயதான அந்த நபர் மயக்க நிலையில் இருந்தார்.

அவரை பரிசோதித்த பகவத் காரத், பாதிக்கப்பட்ட நபரின் சட்டையை கழற்றி அவரது மார்பில் மசாஜ் செய்து அவரது இதயத்திற்கு இரத்தம் பாயும் வகையில் கால்களை சற்று உயர்த்தி தலையணையில் வைத்தார்.

விரைவில் அந்த நபர் சுயநினைவு அடைந்தார். அதன் பின்னர், அவருக்கு குளுக்கோஸ் கொடுக்கப்பட்டது. மேலும் அந்த நபருக்கு உயர் இரத்த அழுத்தம் அல்லது சர்க்கரை பிரச்சினைகள் இல்லை என தெரிவித்தார்.

இதுகுறித்த டுவிட்டர் பதிவை, இண்டிகோ நிறுவனம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தது. இதற்கு பிரதமர் மோடி, 'அவர் இதயத்தில் எப்போதும் மருத்துவர்' என பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story