பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு மத்திய அரசின் தவறான கொள்கைகளே காரணம் - அசோக் கெலாட்


பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு மத்திய அரசின் தவறான கொள்கைகளே காரணம் - அசோக் கெலாட்
x
தினத்தந்தி 17 Nov 2021 2:56 PM GMT (Updated: 17 Nov 2021 3:46 PM GMT)

பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு மத்திய அரசின் தவறான கொள்கைகளே காரணம் என ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஜெய்ப்பூர்,

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு சற்று குறைந்துள்ளது. இதனை தொடர்ந்து பல்வேறு மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை குறைத்துள்ளன. மத்திய, மாநில அரசுகள் வரை சற்று குறைத்துள்ள போது பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது.

அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலத்தில் ஒருலிட்டர் பெட்ரோல் 107.06 ரூபாய்க்கும், டீசல் 90.70 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு மத்திய அரசின் தவறான கொள்கைகளே காரணம் என்று ராஜஸ்தான் மாநில முதல் மந்திரியும், அம்மாநில காங்கிரஸ் தலைவருமான அசோக் கெலாட் குற்றஞ்சாட்டியுள்ளார். கோடா மாவட்டம் ஜோர்வார்புரா என்ற கிராமத்தில் நடைபெற்ற பொது சபை கூட்டத்தில் அசோக் கெலாட் பங்கேற்றார். 

அந்த கூட்டத்தில் பேசிய அசோக் கெலாட், நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வதற்கு மத்திய அரசின் தவறான கொள்கைகளே காரணமாகும். நாடு சுதந்திரமடைந்த பின்னர் பெட்ரோல், டீசல் விலை இவ்வளவு உயர்வது இதுவே முதல்முறையாகும். பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து ஒரு லிட்டர் 100 ரூபாயை தாண்டிச்செல்கிறது. தற்போது பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 113 முதல் 115 ரூபாய் வரை செலவாகுகிறது. கலால் வரியை மத்திய அரசு நீக்கியதன் மூலம் ராஜஸ்தான் அரசு 550 கோடி ரூபாய் இழக்க உள்ளது. 

நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு மேலும் 10 முதல் 15 ரூபாய் குறைக்க வேண்டும். இதனால், ராஜஸ்தான் அரசுக்கு 3,500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படலாம். பொதுமக்கள் நலன் கருத்தி அந்த இழப்பை ராஜஸ்தான் அரசு தாங்கிக்கொள்ளும்’ என்றார்.

Next Story