உக்ரைனில் போரால் பாதிக்கப்பட்டு 1.40 கோடி மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்: ஐ.நா அதிர்ச்சி தகவல்!


உக்ரைனில் போரால் பாதிக்கப்பட்டு 1.40 கோடி மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்: ஐ.நா அதிர்ச்சி தகவல்!
x
தினத்தந்தி 3 Nov 2022 4:40 AM GMT (Updated: 3 Nov 2022 4:50 AM GMT)

உக்ரைன் போர் தொடங்கப்பட்டதிலிருந்து 1.40 கோடி மக்கள் தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.

நியூயார்க்,

உலகம் முழுவதும் 10 கோடிக்கும் மேற்பட்டோர் அகதிகளாக இருப்பதாக ஐ.நா. அகதிகளுக்கான உயர் ஆணையர் பிலிப்போ கிராண்டி கவலை தெரிவித்தார்.நேற்று நடைபெற்ற ஐ.நா. கூட்டத்தில் பிலிப்போ கிராண்டி பேசியதாவது:-

உக்ரைன் போர் பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டதிலிருந்து, இதுவரை 14 மில்லியன் உக்ரேனியர்கள் ரஷிய படையெடுப்பிற்குப் பிறகு தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர். கடந்த ஆண்டுகளில் இத்தகைய அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் இடம்பெயர்வு நடப்பது இதுவே முதல்முறை.

உக்ரேனியர்கள் உலகின் மிகக் கடுமையான குளிர்காலங்களில் ஒன்றை இந்த ஆண்டு எதிர்கொள்ள உள்ளனர்.உக்ரைனில் இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவுவதில் எங்கள் கவனம் அதிகரித்து வருகிறது.

உக்ரைனின் அண்டை நாடான மோல்டோவாவில், அதன் பாதிப்பைக் கருத்தில் கொண்டு சிறப்பு கவனம் தேவை. ஐரோப்பிய ஒன்றியத்தில், திறந்த, சிறந்த நிர்வாகத்திறன் கொண்டு அகதிகளை அனுமதித்துள்ளனர்.

மனிதாபிமான நிறுவனங்கள் தங்கள் பங்காற்றலை இன்னும் அதிகரிக்க வேண்டும். உக்ரைனின் உல்கட்டமைப்புகளில் தாக்குதல் அதிகரித்துள்ளதால், மனிதாபிமான நிறுவனங்கள் ஆற்றும் உதவி பெருங்கடலில் சிறு துளி போன்றது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story