#லைவ் அப்டேட்ஸ்: புதின் ஒரு பெண்ணாக இருந்திருந்தால், போரில் இறங்கியிருக்க மாட்டார் -போரிஸ் ஜான்சன்


#லைவ் அப்டேட்ஸ்: புதின் ஒரு பெண்ணாக இருந்திருந்தால், போரில் இறங்கியிருக்க மாட்டார் -போரிஸ் ஜான்சன்
x

AFP

தினத்தந்தி 28 Jun 2022 8:19 PM GMT (Updated: 29 Jun 2022 4:21 PM GMT)

உக்ரைன் வணிக வளாகம் மீது ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டனர்.


Live Updates

  • 28 Jun 2022 9:38 PM GMT

    ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்திய இடத்திற்கு வருகை தருமாறு ஐ.நா.வை ஜெலென்ஸ்கி வலியுறுத்தி உள்ளார்.

    ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உரையாற்றிய உக்ரைனின் அதிபர் ஜெலென்ஸ்கி, மத்திய நகரமான கிரெமென்சுக்கில் உள்ள வணிக வளாகத்தில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தை பார்வையிட ஐக்கிய நாடுகள் சபைக்கு அழைப்பு விடுத்தார்.

    இது தொடர்பாக பேசிய அவர், “ஐ.நா. ஒரு சிறப்புப் பிரதிநிதியையோ அல்லது ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரையோ அல்லது ஒரு முழு அதிகார ஆணையத்தையோ இந்த பயங்கரவாதச் செயல் நடந்த இடத்திற்கு அனுப்ப வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன். எனவே ஐ.நா. சுதந்திரமாக தகவல்களைக் கண்டுபிடித்து இது உண்மையில் ரஷியாவால் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதல் என்பதை அறிய முடியும்” என்று ஜெலென்ஸ்கி கூறினார்.

  • 28 Jun 2022 8:37 PM GMT


    உக்ரைன் மீதான ரஷிய போர் 4 மாதங்களை கடந்து முடிவின்றி தொடர்ந்து கொண்டிருக்கிறது.

    கருங்கடல் நகரமான ஒச்சாகிவில் நேற்று ரஷிய படைகள், குடியிருப்புகளை குறி வைத்து தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் கட்டிடங்கள் சேதம் அடைந்ததாகவும், 2 பேர் உயிரிழந்ததாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த நிலையில் கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்கள் தர வேண்டும் என்ற உக்ரைனின் கோரிக்கையை அமெரிக்கா பரிசீலித்து, அதற்கு பதில் அளிக்க தயாராகி வருவதாக வாஷிங்டன் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • 28 Jun 2022 8:21 PM GMT


    நேற்று முன்தினம் அந்த நாட்டின் மத்திய நகரமான கிரெமென்சுக் நகரில் அமைந்துள்ள வணிக வளாகம் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அப்போது அந்த வணிக வளாகத்தினுள் ஏறத்தாழ 1000 பேர் வரையில் இருந்திருப்பார்கள் என தகவல்கள் கூறுகின்றன.

    ஏவுகணை தாக்குதலால் அதிர்ந்து போன பொதுமக்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்து, அருகில் உள்ள வெடிகுண்டு தவிர்ப்பு புகலிடங்களில் தஞ்சம் புகுந்தார்கள். கட்டிடத்தின் ஒரு பகுதி ஏவுகணை தாக்குதலால் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அங்கு கரும்புகை மண்டலம் உருவானது. உடனடியாக மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டன.

    18 பேர் பலி

    ரஷிய ஏவுகணை தாக்குதலால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி 18 பேர் பலியாகினர். 25 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். 36 பேரை காணவில்லை.

    இந்த ஏவுகணை தாக்குதல், ஐரோப்பிய வரலாற்றில் நடந்துள்ள பயங்கரவாத தாக்குதல்களில் ஒன்று என்று உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெறுகின்றன.

    ரஷிய ஏவுகணை தாக்குதல் நடந்த பிராந்தியத்தில் நேற்று துக்க நாளாக கடைப்பிடிக்கப்பட்டது. இதற்கிடையே உக்ரைனுக்கு உதவிகளைத் தொடர்வது என்று மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.

    இந்த தாக்குதல்களை தொடர்ந்து உக்ரைன் வேண்டுகோளுக்கு இணங்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசரமாகக்கூடி இதுபற்றி விவாதித்துள்ளது.


Next Story