மன்னிப்பு கேட்ட மாமனிதர்..!


மன்னிப்பு கேட்ட மாமனிதர்..!
x
தினத்தந்தி 25 Feb 2017 7:58 AM GMT (Updated: 25 Feb 2017 7:58 AM GMT)

அமெரிக்க போலீசாரும், அமெரிக்க நீதித்துறையும் இழைத்த தவறுக்காக, பேஸ்புக் நிறுவனர் மார்க் சுகர்பெர்க் மன்னிப்பு கேட்ட சம்பவம் உலக மக்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.

மெரிக்க போலீசாரும், அமெரிக்க நீதித்துறையும் இழைத்த தவறுக்காக, பேஸ்புக் நிறுவனர் மார்க் சுகர்பெர்க் மன்னிப்பு கேட்ட சம்பவம் உலக மக்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது. தாம் செய்த தவறுக்கே மன்னிப்பு கேட்க வெட்கப்படும் உலகில் தவறு செய்யாமல் தண்டிக்கப்பட்ட ஆண்டனி ராய் ஹிண்டன் என்பவரை சந்தித்து மன்னிப்பு கேட்டதுடன், ஆறுதலும் கூறியுள்ளார்.

ஆண்டனி ராய், அமெரிக்காவின் பிர்மின்ஹாமில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். 30 ஆண்டுகளுக்கு முன்பு அருகில் இருந்த உணவு விடுதிக்கு சாப்பிட சென்றிருக் கிறார். அப்பொழுது அங்கு ஒரு கொலை சம்பவம் நடந்திருக்கிறது. அங்கு விசாரணைக்கு சென்ற போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் ஆண்டனியை கைது செய்திருக்கிறார்கள். கொலையை நேரில் பார்த்தவர்கள், ‘குற்றவாளி கருப்பாகவும், குறுந்தாடி வைத்தவனாகவும் இருந்ததாக வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்கள். குற்றவாளியின் அங்க அடையாளங்கள் ஆண்டனியிடம் ஒத்துபோக... முழுமையாக விசாரிக்காமல் அவரை கைது செய்துவிட்டனர்.

போலீஸ் காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ஆண்டனியிடம் இரண்டு கேள்விகள் முன்வைக்கப்பட்டன. ‘‘துப்பாக்கி வைத்திருக்கிறாயா..?’’ என்ற கேள்விக்கு ஆண்டனி இல்லை என்று பதில் கூறி தப்பித்து விட்டார். அதையடுத்து உன் குடும்பத்தினர் யாரேனும் துப்பாக்கி வைத்திருக்கிறார்களா? என்று கேட்டிருக்கிறார்கள். உண்மையை மறைக்கவிரும்பாத ஆண்டனி, ‘‘என் அம்மாவிடம் துப்பாக்கி இருக்கிறது’’ என்று கூற, ஒரே அமுக்காக அமுக்கி “குற்றவாளி” என முத்திரை குத்திவிட்டனர். ஆண்டனியின் வாதம் நீதிமன்றத்தில் செல்லா காசாகிவிட்டது.

நிரபராதியாக சிறை தண்டனை அனுபவித்த ஆண்டனிக்கு பல வழிகளில் இருந்தும் உதவிகள் குவிய ஆரம்பித்தன. குறிப்பாக பிரையன் ஸ்டீவன்சன் என்பவர் ஆண்டனியை நிரபராதி என நிரூபிக்க போராடினார். ஒன்றல்ல... இரண்டல்ல... 30 ஆண்டு கால போராட்டம் கடந்த வாரம் தான் முடிவுக்கு வந்திருக்கிறது. ஆம்..! போலீஸ் அதி  காரிகளின் கவனக்குறைவால் ஆண்டனி 30 ஆண்டு காலத்தை ஜெயில் கைதியாகவே கழித்திருக்கிறார்.

‘‘துப்பாக்கி இருக்கிறதா..? என்று கேட்டவர்கள் என்னுடைய அம்மாவின் துப்பாக்கியும், கொலையாளியின் உடலில் இருந்த தோட்டாவும் ஒத்துப்போகிறதா...? என்ற வி‌ஷயத்தில் கோட்டைவிட்டுவிட்டனர். நல்லவேளை.. துப்பாக்கியும், தோட்டாவும் கொஞ்சம் ஒத்துப்போயிருந்தாலும் என்னை குற்றவாளி என முடிவு செய்து கொன்றிருப்பார்கள்’’ என்று மிரட்சியோடு பேசும் ஆண்டனியை, மார்க் சுகர்பெர்க் மனைவி பிரிசெல்லாவுடன் சென்று சந்தித்திருக்கிறார். ஆண்டனியின் 30 வருட சோகக்கதையை செவி கொடுத்து கேட்டதுடன், தன்னால் உதவ முடியவில்லையே என்ற குற்ற உணர்ச்சியால் துவண்டு போயிருக்கிறார். இதை பார்த்து ஆச்சரியப்பட்ட ஆண்டனி ‘‘சம்பந்தப்பட்டவர்களே மவுனம் சாதிக்கும் நிலையில் நீங்கள் ஏன் வருத்தப்படுகிறீர்கள்’’ என கூறியுள்ளார். அதற்கு மார்க் சுகர்பெர்க் ‘‘இந்த குற்றத்தில் அமெரிக்க நீதித்துறை மட்டுமல்ல... ஒவ்வொரு அமெரிக்க குடிமகனுக்கும் பங்கு இருக்கிறது. அந்த அடிப்படையில்தான் நான் மன்னிப்பு கோருகிறேன்’’ என்று உள்ளம் உருகியதுடன்... மனதார மன்னிப்பும் கேட்டிருக்கிறார், அந்த  மாமனிதர்.

Next Story