லலித் மோடிக்கு மிகப்பெரிய நிவாரணம்! இந்தியாவின் கோரிக்கையை இன்டர்போல் நிராகரித்தது


லலித் மோடிக்கு மிகப்பெரிய நிவாரணம்! இந்தியாவின் கோரிக்கையை இன்டர்போல் நிராகரித்தது
x
தினத்தந்தி 28 March 2017 4:08 AM GMT (Updated: 2017-03-28T09:37:51+05:30)

பல்வேறு பண மோசடிகளில் ஈடுபட்டு பிரிட்டனுக்கு தப்பிய லலித் மோடியை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை இன்டர்போல் நிராகரித்தது.

லண்டன், 

 
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தலைவராக லலித் மோடி இருந்த போது கடந்த 2009–ம் ஆண்டு ஒளிபரப்பு உரிமை வழங்குவதில் மோசடி செய்ததுடன், சட்டவிரோத பண பரிவர்த்தனையிலும் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக 2012–ம் ஆண்டு அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கில் ஒத்துழைக்குமாறு தற்போது லண்டனில் இருக்கும் லலித் மோடிக்கு அமலாக்கத்துறை பலமுறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் ஒத்துழைக்க மறுத்ததால் மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் லலித் மோடிக்கு ஜாமீனில் வெளிவர முடியாத ‘பிடிவாரண்டு’ பிறப்பிக்குமாறு மனுத்தாக்கல் செய்தது. அதன்படி சிறப்பு நீதிமன்றத்தில் ‘பிடிவாரண்டு’ பிறப்பிக்கப்பட்டது. 

இதுவும் பலன் தரவில்லை. இதனால் ‘ரெட் கார்னர் நோட்டீசு’ பெற்று சர்வதேச போலீஸ் உதவியுடன் லண்டனில் இருந்து இந்தியாவுக்கு லலித் மோடியை கொண்டு வர அமலாக்கத்துறை முடிவுசெய்தது. இதில் ஒரு கட்டமாக சர்வதேச போலீஸ் நடவடிக்கைக்கு சி.பி.ஐ. மூலம் செல்ல முடியும் என்பதால் அதன் உதவி கேட்டு சி.பி.ஐ. அலுவலகத்துக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியது. கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20-ந் தேதி 'இன்டர்போல்' எனப்படும் சர்வதேச போலீசுக்கு சி.பி.ஐ. லலித்மோடிக்கு எதிரான ஆவணங்கள் மற்றும் கடிதங்களை அனுப்பட்டது.

 இதை தொடர்ந்து சர்வதேச போலீஸ் அவரை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கியது. லலித் மோடி மால்டா தீவில் பதுங்கி உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியது. இதற்கிடையே அதே ஆண்டு செப்டம்பர் மாதம் லலித் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் விடுப்பதற்கு காரணம் என்ன? என்று இந்தியாவிடம் கேள்வி எழுப்பிய இண்டர்போல் விளக்கம் அளிக்குமாறு கேட்டுக் கொண்டது. போதுமான ஆவணங்கள் உள்ளதா? என்றும் இவ்விவகாரத்தில் மற்ற குற்றவாளிகளின் தகவல்களையும் அவர்கள் கேட்டுக் கொண்டு உள்ளது என்றும் ஏன் விசாரணையின் தாமதம் என்பதை தெரிந்துக் கொள்ளவும் இண்டர்போல் விரும்புகிறது என்று கூறப்பட்டது. பின்னர் விளக்கம் அளிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மாநிலங்களவையில் இதுதொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்த வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், லலித் மோடி, மல்லையா தொடர்பாக இந்திய அரசுக்கும், பிரிட்டன் அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. பிரிட்டன் பிரதமர் தெரஸா மே சமீபத்தில் இந்தியா வந்தபோது இதுகுறித்து வலியுறுத்தப்பட்டது. சட்டத்தின் பிடியில் இருந்து எந்தக் குற்றவாளியும் தப்ப முடியாது. இருவரையும் இந்தியா கொண்டு வருவதற்கான முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்று கூறினார். 

இப்போது இந்நகர்வில் லலித் மோடிக்கு பெரும் நிவாரணமாக அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை இன்டர்போல் நிராகரித்தது. இந்தியாவின் கோரிக்கையின் படி லலித் மோடிக்கு எதிராக ‘ரெட் கார்னர் நோட்டீசு’  வழங்க முடியாது என இன்டர்போல் கூறிவிட்டது. இதன் அர்த்தம் இந்திய அரசின் கோரிக்கையின்படி, இந்தியாவிடம் ஒப்படைக்க லலித் மோடியை இன்டர்போல் கைது செய்யாது என்பதே. இது தொடர்பான அறிக்கையை லலித் மோடி அவருடைய டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார். 

Next Story