பாகிஸ்தானில் தற்கொலை படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 22 பேர் உயிரிழப்பு


பாகிஸ்தானில் தற்கொலை படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 22 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 31 March 2017 10:57 AM GMT (Updated: 2017-03-31T16:27:47+05:30)

பாகிஸ்தானில் தற்கொலை படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 22 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.


பெஷாவர்,  

பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள குர்ரம் ஏஜென்சி பகுதியின் தலைநகரான பராச்சினாரில் சந்தை பகுதியில்  தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவன் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை ஓட்டி வந்து, ஷியா பிரிவு இமாம் பர்க்கா கட்டிடத்தின் வாயில் கதவு மீது பயங்கரமாக மோதி வெடிக்க செய்தான். மிக பயங்கரமான சத்தத்துடன் குண்டுகள் வெடித்து சிதறியது. அந்தப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள், குண்டுவெடிப்பால் தீப்பிடித்து எரிந்து நாசமாயின.

இந்த தாக்குதல் குறித்த தகவல் அறிந்ததும் பாதுகாப்பு படையினர் அந்தப் பகுதிக்கு விரைந்து வந்து, சுற்றி வளைத்தனர். இந்த தாக்குதலில் 22 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். பலியானவர்களில் பெண்களும், குழந்தைகளும் அடங்குவார்கள். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அங்கிருந்து மீட்கப்பட்டு ஆம்புலன்சுகள், தனியார் கார்கள் மூலம் குர்ரம் ஏஜென்சியின் தலைமை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவ இடத்துக்கு ராணுவ மருத்துவ ஹெலிகாப்டரும் விரைந்து வந்து, மீட்பு பணியில் ஈடுபட்டது. 

படுகாயம் அடைந்தவர்களில் பலரது நிலைமை மோசமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு எந்தவொரு பயங்கரவாத இயக்கமும் உடனடியாக பொறுப்பு ஏற்கவில்லை. தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், பாகிஸ்தான் தெக்ரீக் இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான்கான் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இந்த தாக்குதல் பற்றி உள்துறை மந்திரி சவுத்ரி நிசார் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இப்பகுதி, பயங்கரவாதிகளின் புகலிடமாக உள்ளது.  பாகிஸ்தான் தலீபான், அல்கொய்தா உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களை சேர்ந்த பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். 

Next Story