கடத்தப்பட்ட இரு பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளையும் மீட்டது ஆப்கானிஸ்தான் ராணுவம்


கடத்தப்பட்ட இரு  பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளையும் மீட்டது ஆப்கானிஸ்தான் ராணுவம்
x
தினத்தந்தி 27 July 2017 9:53 AM GMT (Updated: 2017-07-27T15:25:45+05:30)

கடத்தப்பட்ட பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளை ஆப்கானிஸ்தான் ராணுவம் மீட்டது.

இஸ்லமபாத்,

ஆப்கானிஸ்தானின்  ஜலாதாபாத்தில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் அதிகாரிகளாக பணியாற்றி வந்த இருவர் கடந்த ஜூன் 16 ஆம் தேதி கடத்தப்பட்டனர். ஜலாதாபாத்தில் இருந்து பாகிஸ்தான் -ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியான டோர்கம் பகுதிக்கு சென்ற இரு அதிகாரிகளும் கடத்தப்பட்டனர்.

இந்த நிலையில், அதிகாரிகள் இருவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கான் ராணுவம் இரு அதிகாரிகளையும் மீட்டதாக ஆப்கான் அதிபர்  அஷ்ரப் கானி தெரிவித்தாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. 

மீட்கப்பட்ட இரு அதிகாரிகளும் காபூலில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் ஒப்படைக்கப்படவுள்ளனர். தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டதும் அதிகாரிகள் இருவரும் குடும்பத்தினரை காண பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளை பத்திரமாக மீட்டதற்காக ஆப்கானிஸ்தான் துணை வெளியுறவு மந்திரி ஹேக்மத் கார்சாயை தொடர்பு கொண்ட பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலர் தெஹ்னிமா ஜனுஜா தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார். ஆனால், இவர்கள்  யாரால் கடத்தப்பட்டனர், எவ்வாறு மீட்கப்பட்டனர் என்ற எந்த செய்தியையும் தற்போது வரை உள்ளூர் ஊடகங்கள் எந்த செய்தியையும் வெளியிடவில்லை. 


Next Story