ஜெனீவாவில் வைகோவை சிங்களர்கள் தாக்க முயன்றதை அடுத்து ஐ.நா. சார்பில் வைகோவுக்கு பாதுகாப்பு


ஜெனீவாவில் வைகோவை சிங்களர்கள் தாக்க முயன்றதை அடுத்து ஐ.நா. சார்பில் வைகோவுக்கு பாதுகாப்பு
x
தினத்தந்தி 26 Sep 2017 12:51 PM GMT (Updated: 2017-09-26T18:21:44+05:30)

ஜெனீவாவில் வைகோவை சூழ்ந்துகொண்டு சிங்களர்கள் தாக்க முயன்றதை அடுத்து ஐ.நா. சார்பில் வைகோவுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.


ஜெனீவா, 

சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனீவா நகரில் அமைந்துள்ள ஐ.நா. சபையில் மனித உரிமை கவுன்சிலின் 36-வது அமர்வு செப்டம்பர் 11-ந் தேதி முதல் 29-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த அமர்வில் இலங்கைத் தீவின் ஈழத் தமிழர்கள் பிரச்சினையும் விவாதிக்கப்படுகிறது. 

இதில் பங்கேற்பதற்காக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, ஜெனீவா சென்று உள்ளார். ஜெனீவா மனித உரிமைகள் கவுன்சிலில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக வைகோ 2 முறை பேசினார். தனது பேச்சை முடித்த சில நிமிடத்திலேயே, கவுன்சில் வளாகத்தில் இலங்கையை சேர்ந்த சிங்களர்கள் வைகோவை சூழ்ந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. வைகோவிடம் தகராறு செய்த சிங்களர்களில், போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இலங்கையை சேர்ந்த முன்னாள் ராணுவத்தினரும் இருந்ததாக கூறப்படுகிறது.

அந்த குழுவில் இருந்த சிங்கள பெண் ஒருவர், இலங்கை பிரஜை இல்லாத நீங்கள் இலங்கையை பற்றி எப்படி பேசலாம்? என்று வைகோவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதற்கு, ‘‘நான் தமிழ்நாட்டை சேர்ந்தவன். எங்களுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தொப்புள்கொடி ரத்த உறவு இருக்கின்றது. ஆகவே எனக்கு பேச உரிமை உண்டு’’ என்று வைகோ பொறுமையாக பதில் அளித்தார். சிங்கள பெண், வைகோவுடன் தகராறு செய்வதை மனித உரிமைகள் கவுன்சிலுக்கு உள்ளேயே சிலர் வீடியோ எடுத்தனர். 

இதற்கிடையே சிங்களர்கள் அவரை சூழ்ந்து கொண்டு பிரச்சனை செய்ய முயற்சி செய்து உள்ளனர். அவர்கள் வீடியோவை எடுத்து உள்ளனர்.  பொதுவாக மனித உரிமைகள் கவுன்சில் உள்ளே வைத்து யாரும் வீடியோ எடுக்கக்கூடாது. திட்டமிட்டு வைகோவை மனித உரிமைகள் கவுன்சிலுக்குள் வர விடாமல் தடுக்க செய்கின்ற சதி என்று ஈழத்தமிழர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே வீடியோ குறித்து பாதுகாப்பு அதிகாரியிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகள் செல்போனில் எடுக்கப்பட்ட வீடியோவை அழித்துவிட்டனர். 

 ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் வைகோவை சிங்களர்கள் தாக்க முயன்றதற்கு திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். வைகோவை சிங்களர்கள் தாக்க முயன்றது தொடர்பாக ஐ.நா. சபையிடம் தமிழ் அமைப்புகள் சார்பில் புகார்கள் தெரிவிக்கப்பட்டது, அவருக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து அவருக்கு இரு பாதுகாப்பு அதிகாரிகளை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஏற்பாடு செய்து உள்ளது.


Next Story