அமெரிக்க பல்கலைக்கழகத்துக்கு இந்திய டாக்டர் தம்பதியர் ரூ.1,300 கோடி நன்கொடை


அமெரிக்க பல்கலைக்கழகத்துக்கு இந்திய டாக்டர் தம்பதியர் ரூ.1,300 கோடி நன்கொடை
x
தினத்தந்தி 26 Sep 2017 11:15 PM GMT (Updated: 26 Sep 2017 9:34 PM GMT)

அமெரிக்க பல்கலைக்கழகத்துக்கு இந்திய டாக்டர் தம்பதியர் ரூ.1,300 கோடி நன்கொடை

ஹூஸ்டன்,

அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உள்ள டாம்பா துறைமுக நகரில், ‘பிரிடம் ஹெல்த்’ என்ற பெயரில் சுகாதார நிறுவனம் நடத்தி வருபவர் டாக்டர் கிரண் பட்டேல். இந்திய வம்சாவளியான இவர் இதய நோய் மருத்துவ நிபுணராகவும் தொழில் செய்துள்ளார். இவரது மனைவி, பல்லவி பட்டேல். இவர் குழந்தைகள் நல மருத்துவ நிபுணர்.

இவர்கள் தாங்கள் நடத்தி வருகிற பட்டேல் குடும்ப அறக்கட்டளையின் சார்பில், மியாமி அருகே அமைந்துள்ள நோவா தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு 200 மில்லியன் டாலர் (சுமார் ரூ.1,300 கோடி) நன்கொடை அளித்துள்ளனர்.

இதில் 50 மில்லியன் டாலரை ரொக்கமாகவும், மீதி 150 மில்லியன் டாலரை 3¼ லட்சம் சதுர அடி நிலமாகவும் வழங்கி உள்ளனர்.

இந்த நன்கொடையை பயன்படுத்தி அந்த பல்கலைக்கழகம், ஒரு பிராந்திய வளாகத்தை தொடங்கும்.

அதன்மூலம் இந்தியாவில் இருந்து வருகிற டாக்டர்களுக்கு ஓராண்டு காலம் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது பயிற்சியாளர்களுக்கு பயிற்சி அளிப்பது போன்றதாகும் என டாக்டர் கிரண் பட்டேல் கூறினார்.

மேலும் புளோரிடா மாகாணத்தில் உலகத்தரம் வாய்ந்த சுகாதாரத்தை உருவாக்கவும் இவர்களது நன்கொடை பக்கபலமாக அமையும்.

இந்தப் பல்கலைக்கழகம், ஆண்டுக்கு 250 டாக்டர்களை உருவாக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

பல்லவி பட்டேல் கூறும்போது, “நோவா தென்கிழக்கு பல்கலைக்கழகத்துடனான எங்களது கூட்டு ஆயிரக்கணக்கான டாக்டர்களுக்கும், மாணவர்களுக்கும் நன்மையாக அமையும்” என்று குறிப்பிட்டார். 

Next Story