ரெயில்வே திட்டத்தை விரைந்து முடிக்க சீனாவிடம் உதவி கேட்கிறது இந்தியா


ரெயில்வே திட்டத்தை விரைந்து முடிக்க சீனாவிடம் உதவி கேட்கிறது இந்தியா
x
தினத்தந்தி 15 April 2018 11:30 PM GMT (Updated: 15 April 2018 7:05 PM GMT)

சென்னை-பெங்களூரு அதிவேக ரெயில் பாதை திட்டத்தை விரைந்து முடிக்க சீனாவிடம் மத்திய அரசு உதவி கேட்டு உள்ளது.

பீஜிங், 

தென்னிந்தியாவின் முன்னணி நகரங்களான சென்னை மற்றும் பெங்களூரு இடையிலான பயண நேரத்தை குறைக்கும் வகையில் அதிவேக ரெயில் பாதை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. அதன்படி மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் ரெயில் இயக்கும் வகையில் பாதை அமைக்க பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

இதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து செயல்திட்டம் வகுக்கும் வேலைகள் நடந்து வருகிறது. இந்த திட்டத்தை விரைந்து முடிக்க தற்போது சீனாவிடம் உதவி கேட்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே நேற்று முன்தினம் நடந்த பேச்சுவார்த்தையில் இந்த பரிந்துரையை சீனாவிடம் இந்தியா வழங்கியது. இந்தியாவின் இந்த பரிந்துரை குறித்து பரிசீலித்து முடிவு அறிவிப்பதாக சீனா கூறியுள்ளது.

இதைப்போல ஆக்ரா மற்றும் ஜான்சி ரெயில் நிலையங்களை மேம்படுத்துவது தொடர்பாக ஏற்கனவே அளித்து இருந்த பரிந்துரை குறித்தும் இந்த கூட்டத்தில் பேசப்பட்டது. எனினும் அதிவேக ரெயில்களை இந்தியாவில் தயாரிப்பதற்கு ஒத்துழைப்பது குறித்து இந்த கூட்டத்தில் எதுவும் விவாதிக்கப்படவில்லை.

இரு நாடுகளுக்கு இடையே நடந்த இந்த பேச்சுவார்த்தையில் நிதி ஆயோக்கின் துணைத்தலைவர் ராஜிவ் குமார் மற்றும் சீனாவின் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணைய தலைவர் ஹி லிபெங் ஆகியோர் தலைமையிலான குழுவினர் பங்கேற்றனர்.

அதிவேக ரெயில் இயக்கத்தில் முன்னணியில் இருக்கும் சீனா, தங்கள் நாட்டில் பல்வேறு நகரங்களுக்கு இடையே சுமார் 22 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு இத்தகைய ரெயில் பாதையை கொண்டுள்ளது.

இந்த அனுபவத்துடன் இந்தியாவிலும் அதிவேக ரெயில் பாதை அமைக்கும் பணிகளில் நாட்டம் காட்டியுள்ளது. அந்த வகையில் டெல்லி- சென்னை இடையிலான அதிவேக ரெயில் பாதை அமைப்பதற்கான சாத்தியக்கூறுக்கான ஆய்வுகளை தொடங்கி இருக்கிறது.

அதே நேரம் இந்தியாவிலேயே முதலாவதாக மும்பை- ஆமதாபாத் இடையிலான அதிவேக ரெயில் பாதை அமைக்கும் பணிகளை ஜப்பான் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story