தீவிரவாதம் அடிப்படை மனித உரிமைகளின் எதிரி: சுஷ்மா சுவராஜ் பேச்சு


தீவிரவாதம் அடிப்படை மனித உரிமைகளின் எதிரி:  சுஷ்மா சுவராஜ் பேச்சு
x
தினத்தந்தி 24 April 2018 5:42 AM GMT (Updated: 24 April 2018 5:42 AM GMT)

தீவிரவாதம் அடிப்படை மனித உரிமைகளின் எதிரி என ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு மந்திரிகளின் கூட்டத்தில் சுஷ்மா சுவராஜ் இன்று கூறியுள்ளார். #SushmaSwaraj

பெய்ஜிங்,

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளான சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகியவை கலந்து கொள்ளும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு வருகிற ஜூனில் நடைபெற உள்ளது.

இந்த அமைப்பின் ராணுவம் மற்றும் வெளியுறவு மந்திரிகளின் கூட்டம் இன்று நடைபெறுகிறது.  இதில் பங்கேற்க மத்திய மந்திரிகள் முறையே நிர்மலா சீதாராமன் மற்றும் சுஷ்மா சுவராஜ் ஆகியோர் சீனா சென்றுள்ளனர்.

இந்த நிலையில், இன்று தொடங்கிய ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு மந்திரிகள் கூட்டத்தில் சுஷ்மா சுவராஜ் இன்று கலந்து கொண்டார்.  கூட்டத்தில் அவர் பேசும்பொழுது, உலகளவிலான தீவிரவாதம் மற்றும் சர்வதேச வர்த்தகத்தினை கட்டுப்படுத்தும் கொள்கைகள் ஆகிய விவகாரங்களை எழுப்பினார்.

அவர், உலகம் இன்று எண்ணற்ற சவால்களை சந்தித்து வருகிறது.  அதில் சர்வதேச அளவிலான தீவிரவாம் முக்கிய அச்சுறுத்தலாக உள்ளது.  அதனை கட்டுக்குள் கொண்டு வர வலிமையான பாதுகாப்பு கட்டமைப்பினை உருவாக்க வேண்டிய முக்கிய தேவை ஏற்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர், தீவிரவாதம் ஆனது அடிப்படை மனித உரிமைகளின் எதிரியாக உள்ளது.  அது நம்முடைய வாழ்க்கை, அமைதி மற்றும் வளம் ஆகியவற்றிற்கும் எதிரியாக உள்ளது என கூறினார்.

சர்வதேச வர்த்தகத்தினை கட்டுப்படுத்தும் அரசின் கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள் ஆகியவை அதன் அனைத்து வடிவங்களிலும் நிராகரிக்கப்பட வேண்டும்.  வர்த்தகத்திற்கு தடையாக உள்ள நடவடிக்கைகளை ஒழுங்குப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உள்ள நாடுகளுடன் பொருளாதார மற்றும் முதலீட்டு பிணைப்புகளை வலுப்படுத்தும் பணியில் இந்தியா ஈடுபட்டு வருகிறது.  இருதரப்பு நலன்களுக்காக பொருளாதார உலக மயமாக்கல் என்பது அதிக வெளிப்படையுடனும், சமத்துவமுடனும் மற்றும் சமநிலையுடனும் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் முழு உறுப்பினர்களாக கடந்த ஆண்டு இணைந்தன.

Next Story