மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு சம்மன்


மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு சம்மன்
x
தினத்தந்தி 19 May 2018 10:30 PM GMT (Updated: 19 May 2018 7:25 PM GMT)

ஊழல் குற்றச்சாட்டில் விசாரணை நடத்த மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.

கோலாலம்பூர்,

மலேசியாவில் சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், 60 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இருந்து வந்த பேரிசன் நே‌ஷனல் கூட்டணி (பி.என்.) தோல்வியைத் தழுவியது.

எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நஜிப் ரசாக், பிரதமர் பதவியை இழந்தார். மேலும், 92 வயது மகாதீர் முகமது பிரதமர் ஆனார்.

அதைத் தொடர்ந்து, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஊழல் புரிந்து உள்ளதாக நஜிப் ரசாக் மீது எழுந்த குற்றச்சாட்டு சூடு பிடிக்கத்தொடங்கியது. அவர் நாட்டை விட்டு வெளியேறக்கூடாது என தடை விதிக்கப்பட்டது.

அவரது வீட்டிலும், அவருக்கு சொந்தமான இடங்களிலும் போலீசார் அதிரடி சோதனைகள் நடத்தினர். அங்கு இருந்து பண கட்டுகள், நகைகள் வைத்து நிரப்பப்பட்ட ஏராளமான கைப்பைகள் சிக்கின.

இந்த நிலையில் அவர் வரும் செவ்வாய்க்கிழமை அன்று விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறி ஊழல் தடுப்பு அமைப்பு சம்மன் அனுப்பி உள்ளது. அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படும். அதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்படுவாரா என தெரியவரும்.


Next Story