அமெரிக்காவை பிற நாடுகள் கொள்ளையிடுகின்றன - டிரம்ப் குற்றச்சாட்டு


அமெரிக்காவை பிற நாடுகள் கொள்ளையிடுகின்றன - டிரம்ப் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 12 Jun 2018 12:00 AM GMT (Updated: 11 Jun 2018 9:28 PM GMT)

இறக்குமதி பொருட்களுக்கு இந்தியா 100 சதவீத வரி விதிப்பதாக டிரம்ப் குற்றம் சாட்டியுள்ள நிலையில், இரு நாட்டுக்கு இடையிலான வர்த்தக உறவில் பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

வாஷிங்டன்,

கனடாவின் கியூபெக்கில் சமீபத்தில் நடந்து முடிந்த ஜி-7 உச்சி மாநாடு, அமெரிக்க ஜனாதிபதிக்கு சில கசப்பான அனுபவங்களை கொடுத்தது. இந்த கூட்டமைப்பில் ரஷியாவை சேர்க்க வேண்டும் என அவர் விரும்பினார். ஆனால் அதை மற்ற நாடுகள் திட்டவட்டமாக நிராகரித்தன. இதனால் விரக்தியில் இருந்த டிரம்புக்கு அடுத்த அடியாக, கனடா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உருக்கு மற்றும் அலுமினியத்துக்கு அமெரிக்கா வரி விதிப்பது சட்டவிரோதமானது என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறினார். இது டிரம்புக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தியது.

எனவே அவர் மாநாட்டின் பாதியிலேயே வெளியேறியதுடன், அந்த மாநாட்டின் இறுதியில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கைக்கு அளித்திருந்த ஒப்புதலையும் திரும்ப பெற்றார். அத்துடன் நிற்காமல், கனடா பிரதமருக்கு எதிராக தனது டுவிட்டர் தளத்தில் பொரிந்து தள்ளிவிட்டார். வடகொரிய தலைவருடனான சந்திப்புக்காக சிங்கப்பூர் செல்லும் வழியில் விமானத்தில் இருந்தவாறே ‘டுவிட்டர்’ தளத்தில் பல்வேறு கருத்துகளை வெளியிட்டு இருந்தார். அதில் கனடா பிரதமரை ‘நேர்மையற்றவர், பலவீனமானவர்’ என்றும், தன்னை அழைத்து வைத்து காயப்படுத்தியதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

வர்த்தகம் குறித்து அவர் கூறுகையில், ‘பரஸ்பர பலன்கள் இல்லை என்றால் அது நல்ல வர்த்தகமாக இருக்காது, மாறாக முட்டாள்தனமான வர்த்தகம் என்றே அழைக்கப்படும். 800 பில்லியன் டாலர் வர்த்தக பற்றாக்குறை. இது அமெரிக்க மக்களுக்கு நல்லதல்ல. எங்கள் விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் வரி செலுத்துவோர் அதிக விலை கொடுக்கும் போது, மற்ற நாடுகள் மிகப்பெரிய வர்த்தக உபரி வருவாய் பெறுவதற்கு அமெரிக்க ஜனாதிபதியாக நான் ஏன் அனுமதிக்க வேண்டும்?’ என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

ஜி-7 நாடுகளுடன் டிரம்ப் நடத்தி வரும் வர்த்தக மோதல் தற்போது இந்தியா உள்ளிட்ட நாடுகளை நோக்கியும் திரும்பி இருக்கிறது. கனடாவில் இருந்து திரும்புமுன் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், அமெரிக்காவை பிற நாடுகள் கொள்ளையிடுவதாகவும், எனவே அந்த நாடுகளுடனான வர்த்தக உறவுகளை துண்டிக்கப்போவதாகவும் மிரட்டினார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘எங்களை உண்டியலை போல நினைத்து ஒவ்வொருவரும் கொள்ளையடிக்கிறார்கள். இந்தியா சில பொருட்களுக்கு 100 சதவீதம் வரி விதிக்கிறது. ஆனால் நாங்கள் எந்த வரியும் விதிக்கவில்லை. நாங்கள் அதை செய்ய முடியாது. எனவே பல நாடுகளுடன் நாங்கள் பேசி வருகிறோம். இதை நிறுத்தவில்லை என்றால் அவர்களுடனான வர்த்தகத்தை நாங்கள் நிறுத்தி விடுவோம்’ என்றார்.

கடந்த சில ஆண்டுகளாக இந்தியா-அமெரிக்கா இடையே சிறந்த வர்த்தக உறவு நீடித்து வருகிறது. குறிப்பாக இருநாட்டு வர்த்தகம் சாதனை அளவாக கடந்த ஆண்டு 125 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்து இருந்தது. இத்தகைய சூழ்நிலையில் டிரம்பின் இந்த அறிவிப்பு, இரு நாட்டு வர்த்தகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story