‘அமெரிக்காவுக்கு வரவேற்கிறோம்’ டொனால்டு ட்ரம்ப்பை கடுமையாக விமர்சித்த டைம்ஸ் இதழ்


‘அமெரிக்காவுக்கு வரவேற்கிறோம்’  டொனால்டு ட்ரம்ப்பை கடுமையாக விமர்சித்த டைம்ஸ் இதழ்
x
தினத்தந்தி 22 Jun 2018 10:41 AM GMT (Updated: 22 Jun 2018 10:41 AM GMT)

‘அமெரிக்காவுக்கு வரவேற்கிறோம்’ என்ற அட்டைப்பட காட்சியுடன் டொனால்டு டிரம்ப்பை டைம்ஸ் இதழ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. #TimeMagazine #Trump

வாஷிங்டன்,

அமெரிக்காவில் குடியேறுபவர்கள் மற்றும் அகதிகள் விவகாரத்தில் டொனால்டு டிரம்ப் எந்தஒரு கனிவும் கிடையாது என்ற நிலையில் செயல்பட்டு வருகிறார். இவ்வாறு அவர் கொண்டுவரும் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள், பொதுமக்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. நீதிமன்றமும் எதிர்க்கிறது. ஆனால் தன்னுடைய நிலைப்பாட்டில் எந்தஒரு மாற்றமும் கிடையாது என டிரம்ப் நகர்ந்து வருகிறார். 

இந்நிலையில் மற்றொரு சர்ச்சைக்குரிய திட்டம் ஒன்றை டொனால்டு டிரம்ப் அரசு முன்னெடுத்தது. அதாவது சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் குடும்பமாக நுழைபவர்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டார்கள். குழந்தைகள் பெற்றோர்களிடம் இருந்து பிரிக்கப்பட்டார்கள்.  திட்டம் தொடங்கிய 6 வார காலங்களில் மட்டும் 2 ஆயிரம் குடும்பங்கள் பிரிக்கப்பட்டது. அடைக்கலம் கோரி அமெரிக்காவிற்குள் நுழைபவர்கள் பாதுகாப்பு படைகளால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்படுகிறார்கள். கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. குடும்பங்கள் பிரிக்கப்பட்டதால் நூற்றுக்கணக்கான சிறார்களும் தடுப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டனர். இது எதிர்பார்க்காத ஒரு கொள்கை முடிவு என சமூக ஆர்வலர்கள், மனித உரிமைகள் குழுக்கள் விமர்சனம் செய்தன. டொனால்டு டிரம்பின் மனைவி, மகளும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து திட்டத்தை கைவிட அமெரிக்க அரசு முடிவு செய்தது.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை கடுமையாக விமர்சனம் செய்யும் வகையில் டைம்ஸ் இதழ் அட்டைப்படம் வெளியிட்டுள்ளது. டைம்ஸ் இதழின் அட்டைப்படத்தில் டொனால்டு டிரம்ப் அழுது கொண்டிருக்கும் சிறுமியை உற்று பார்ப்பது போன்றும், அதற்கு மேல் அமெரிக்காவிற்கு வரவேற்கிறோம் என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. அழுது கொண்டிருக்கும் சிறுமியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் சமீபத்தில் விமர்சனங்களுடன் வைரலாகியது. அமெரிக்காவின் எல்லைப் பாதுகாப்பு படை சிறுமியின் தாயாரை சோதிக்கும் போது, என்ன நடக்கிறது என்று சிறுமி அழும் காட்சி இடம் பெற்று இருந்தது. இந்த படத்தைதான் டொனால்டு டிரம்பிற்கு எதிராக டைம்ஸ் பயன்படுத்தியுள்ளது.

Next Story