மியான்மர் அரசின் ரகசியங்களை வெளியிட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தியாளர்கள் மீது வழக்குப்பதிவு


மியான்மர் அரசின் ரகசியங்களை வெளியிட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தியாளர்கள் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 9 July 2018 1:52 PM GMT (Updated: 9 July 2018 1:52 PM GMT)

மியான்மர் அரசின் ரகசியங்களை வெளியிட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தியாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.



யங்கூன்,

மியான்மரில் ராக்கின் மாகாணத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த ரோஹிங்யா முஸ்லிம் மக்களில் ஒரு பிரிவினர் (கிளர்ச்சியாளர்கள்) கடந்த ஆகஸ்டு மாதம் 25–ந் தேதி போலீஸ் படையினர் மீது தாக்குதல் நடத்தினர். அதைத் தொடர்ந்து அங்குள்ள அந்த இனத்தவர் மீது ராணுவமும், போலீசும் வன்முறையை கட்டவிழ்த்து விட்டன. ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் வசித்து வந்த கிராமங்களுக்கு தீ வைக்கப்பட்டது. ஏராளமானோர் உயிரிழந்தனர். ரோஹிங்யா முஸ்லிம் பெண்கள், பாலியல் வன்முறைகளுக்கும் ஆளானார்கள்.

மியான்மரில் இருந்து 6 லட்சத்து 47 ஆயிரம் ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் அகதிகளாக வங்காளதேசத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

ரோஹிங்யா முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறையில், மியான்மரின் நடைமுறைத்தலைவர் சூ கி எந்தவொரு நடவடிக்கையும் ஆக்கப்பூர்வமாக எடுக்கவில்லை என உலக அளவில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே செய்தியாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ரோஹிங்கியா முஸ்லிம்கள் ராணுவத்தின் அடக்குமுறைக்கு உள்ளாகி நிலையில் சர்வதேச ஊடகங்கள் மியான்மரில் இருந்து தொடர்ந்து செய்தி சேகரித்தது. ராய்டர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் இரு பத்திரிக்கையாளர்கள் இருவர் யாங்கூனில் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். 

யாங்கூனில் இருந்து செய்தி சேகரித்த வா லோன் மற்றும் யாவ் சோய் ஊ என்ற இரு பத்திரிக்கையாளர்களும் மாயமாகினர். அவர்களை தொடர்பு கொள்ள முடியாததால் அங்குள்ள காவல் நிலையத்தில் அந்நிறுவனம் புகாரளித்தது. இதனையடுத்து சட்ட விதிமுறைகளை மீறி செய்தி சேகரித்து அதை வெளிநாட்டுக்கு அனுப்பியதாக வா லோன் மற்றும் யாவ் சோய் ஊ ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்களுக்கு உதவியாக இருந்த ஒரு காவலரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்தது. 

பத்திரிகையாளர்கள் கைதுக்கு சர்வதேச அளவில் எதிர்ப்பு கிளம்பியது. மேலும், கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. செய்தியாளர் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சர்வதேச அளவில் மியான்மர் விமர்சனத்திற்கு உள்ளாகியது. ஐ.நா.வும் கண்டனம் தெரிவித்தது. 

இப்போது ரோஹிங்யா அகதிகள் விவகாரம் தொடர்பாக மியான்மர் அரசின் ரகசியங்களை வெளியிட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் செய்தியாளர்கள் வா லோனே, கியாவ் சோய் டோ ஆகியோர் மீது யாங்கூன் நகர கோர்ட்டு வழக்கு பதிவு செய்தது. இவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் இருவருக்கும் தலா 14 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளது

Next Story