உலக செய்திகள்

குகையில் இருந்து மீட்கப்பட்ட பின்னர் தாய்லாந்து சிறுவர்களின் முதல் வீடியோ வெளியானது + "||" + Thailand cave rescue: First video of boys in hospital emerge

குகையில் இருந்து மீட்கப்பட்ட பின்னர் தாய்லாந்து சிறுவர்களின் முதல் வீடியோ வெளியானது

குகையில் இருந்து மீட்கப்பட்ட பின்னர் தாய்லாந்து சிறுவர்களின் முதல் வீடியோ வெளியானது
குகையில் இருந்து மீட்கப்பட்ட பின்னர் தாய்லாந்து சிறுவர்களின் முதல் வீடியோ வெளியானது.
சியாங் ராய், 

குகையில் இருந்து மீட்கப்பட்ட பின்னர் தாய்லாந்து சிறுவர்களின் முதல் வீடியோ வெளியானது. அவர்கள் ஆஸ்பத்திரி படுக்கையில் இருந்து கையசைக்கின்ற காட்சி இடம் பெற்று இருக்கிறது.

தாய்லாந்து நாட்டில் தாம் லுவாங் குகைக்குள் ‘வைல்டு போர்ஸ்’ (‘காட்டுப்பன்றிகள்’) என அழைக்கப்படுகிற உள்ளூர் கால்பந்து அணி வீரர்களான 12 சிறுவர்களும், அவர்களது பயிற்சியாளரும் திடீரென பெய்த மழை வெள்ளத்தில் சிக்கித்தவித்தனர். 9 நாட்களுக்கு பிறகுதான் அவர்கள் உயிரோடு இருப்பதே தெரியவந்தது.

அவர்களை மீட்க மாதக்கணக்கில் ஆகக்கூடும் என முதல்கட்ட தகவல்கள் வெளியானாலும், இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் உதவியுடன் அதிரடி வியூகங்களும், திட்டங்களும் வகுக்கப்பட்டு கடந்த 8-ந் தேதி தொடங்கி 10-ந் தேதி வரை 3 நாட்களில் அத்தனை பேரும் பத்திரமாக மீட்கப்பட்டு விட்டனர். இது தாய்லாந்துக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகத்துக்கு மகிழ்ச்சியை அளித்து உள்ளது.

இந்த சிறுவர்கள் தற்போது அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளனர். தொற்று நோய் ஏற்படாதவாறு காப்பதற்காக அவர்களை தனிமைப்படுத்தி வைத்து சிகிச்சை அளிக்கின்றனர்.

அவர்கள் 17 நாட்கள் குகைக்குள் வாழ்வா, சாவா போராட்டத்தில் வெள்ளத்திலும், சேற்றிலும் சிக்கித்தவித்த நிலையில், இப்போது புத்தெழுச்சியும், முழுமையான ஆரோக்கியமும் பெறுவதற்கான சிகிச்சைகள் தரப்படுகின்றன.

இதற்கிடையே மீட்பு திட்டத்தின் தலைவர் நாரோங்சாக், சியாங் ராய் நகரில் நேற்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர், “சிறுவர்களை நாங்கள் ஹீரோக்களாக பார்க்கவில்லை. அவர்கள் குழந்தைகள். அவர்களை குழந்தைகளாகத்தான் பார்க்கிறோம். நடந்த சம்பவம் விபத்துத்தான்” என கூறினார்.

இந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது, மீட்கப்பட்ட சிறுவர்களின் முதல் வீடியோ வெளியிடப்பட்டது. சிறுவர்களில் சிலர் அறுவை சிகிச்சைக்கான முகமூடிகளை அணிந்து கொண்டு படுக்கையில் படுத்தும், சிலர் படுக்கையில் உட்கார்ந்து கொண்டு கையசைத்தவாறும் காணப்படுகின்றனர்.

அவர்களது நிலை குறித்து ஏற்கனவே ஒரு சுகாதார அதிகாரி ஒருவர் கூறும்போது, “ஒவ்வொருவரும் சராசரியாக 2 கிலோ எடை குறைந்து உள்ளனர். ஆனாலும் நல்ல உடல் நலத்துடன் உள்ளனர். மன அழுத்தத்துடன் இல்லை” என்று குறிப்பிட்டார்.

இந்த சிறுவர்கள் இன்னும் 10 நாட்கள் ஆஸ்பத்திரியில் இருக்க வேண்டும் என்றும், அதன்பின்னர் வீட்டில் இருந்து 30 நாட்கள் சிகிச்சை பெற வேண்டும் என்றும் அவர்கள் அனுமதிக்கப்பட்டு உள்ள ஆஸ்பத்திரியின் இயக்குனர் சாய்வெட்ச் தனபைசால் கூறினார்.

முதலில் மீட்கப்பட்ட 8 சிறுவர்களின் பெற்றோர் மட்டும் பாதுகாப்பு கவச உடைகள் அணிந்து கொண்டு, அவர்களை 7 அடி தொலைவுக்கு அப்பால் இருந்து பார்ப்பதற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

மீட்கப்பட்ட சிறுவர்கள் முழு ஆரோக்கியம் அடைவதற்கு தேவையான கால அவகாசத்தை நாம் தர வேண்டும் என்று தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓச்சா கூறினார்.