உலகைச் சுற்றி...


உலகைச் சுற்றி...
x
தினத்தந்தி 10 Aug 2018 10:30 PM GMT (Updated: 10 Aug 2018 4:44 PM GMT)

* வெனிசூலா நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோவை ஆளில்லா விமான தாக்குதல் நடத்தி கொல்ல நடந்த முயற்சி குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என ஐரோப்பிய கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.

* ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் குழந்தைகளை ஏற்றிச்சென்ற ஒரு பஸ் மீது நேற்று முன்தினம் நடத்தப்பட்ட தாக்குதலில் 29 குழந்தைகள் கொல்லப்பட்டதும், 30 குழந்தைகள் படுகாயம் அடைந்ததும் உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. சபை வலியுறுத்தி உள்ளது. இதை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வரவேற்று உள்ளனர்.

* அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் 1985–ம் ஆண்டு, 7 வயது சிறுமி கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் பில்லி இரிக் என்ற குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனையை எதிர்த்து அவர் நடத்திய சட்டப்போராட்டங்கள் தோல்வியில் முடிந்த நிலையில், நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி இரவு 7.48 மணிக்கு அவருக்கு வி‌ஷ ஊசி போட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. 9 ஆண்டுகளுக்கு பிறகு அந்த மாகாணத்தில் நிறைவேற்றப்பட்ட முதல் மரண தண்டனை இது.

* பாகிஸ்தான் நாடாளுமன்றம் வரும் திங்கட்கிழமை கூடுகிறது. இதற்கான முறையான அழைப்பை அந்த நாட்டின் ஜனாதிபதி மம்னூன் உசேன் விடுத்து உள்ளார். முதல் நாளில் புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்பர். அதைத் தொடர்ந்து சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தல் நடைபெறும். அடுத்து புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கையை நாடாளுமன்றம் எடுக்கும்.

* பாகிஸ்தானில் கணவனை இழந்த அல்லது விவாகரத்து செய்த இந்துப்பெண், மறுமணம் செய்து கொள்ளலாம் என சிந்து மாகாண சட்டசபையில் சட்ட திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதற்கு முன்பு அங்கு இந்துப் பெண்கள் இவ்வாறு மறுமணம் செய்து கொள்ள அனுமதி இல்லை.

Next Story