பிரான்சை பாதிக்கும் தொற்றுநோய் தாக்கம்


பிரான்சை பாதிக்கும் தொற்றுநோய் தாக்கம்
x
தினத்தந்தி 1 Sep 2018 9:30 AM GMT (Updated: 1 Sep 2018 9:30 AM GMT)

பிரான்ஸ் நாடு தட்டம்மை தொற்று பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரி வித்துள்ளது.

ஐரோப்பாவில் கடந்த ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை 37 பேர் தட்டம்மை பாதிப்பால் பலியாகியிருப்பதாகவும், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்களும் இதில் அடக்கம் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஐரோப்பாவில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என சுமார் 41 ஆயிரம் பேர் ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான கால கட்டத்தில் தொற்றுநோய் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். கடந்த ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின்படி, 24 ஆயிரம் பேர் நோய்த் தொற்றுக்கு ஆளாகியிருந்தனர்.

இதன் விளைவாக, உலக சுகாதார அமைப்பு இதுவரை அம்மை நோய்க்காக தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களை அழைத்துள்ளது. ஏனெனில், தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் மூலம், தடுப்பூசி போடாத 18 பேர் பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இந்த நோயானது இருமல், தும்மல் மூலம் பரவுவதால் அனைத்து வயதினரையும் எளிதில் தாக்கும். பிரான்ஸ் நாட்டில் மட்டும் கடந்த ஆண்டு 2 ஆயிரத்து 741 பேர் இந்நோயினால் பாதிக்கப்பட்டதாக பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1980-ம் ஆண்டுக்கு முன்பு பிறந்தவர்கள் எம்.எம்.ஆர். தடுப்பூசி போட்டுக் கொண்டதில்லை. எனவே, அவர்களுக்கு தட்டம்மை பாதிப்பு இருந்தால் அது பரவும் என்று கூறப்படுகிறது. மேலும், அது ஒவ்வோர் ஆண்டும் நூற்றுக்கணக்கான குழந்தைகளைப் பாதிப்பதாகக் கூறப்படுகிறது.

பிரான்சில் கடந்த ஜூன் மாதத்தில் அம்மை நோயால் பாதிக்கப்பட்ட 26 வயது நபர் ஒருவர் மரணம் அடைந்தார். அதனால், செர்பியா, ரஷ்யா, இத்தாலி, ஜார்ஜியா ஆகிய நாடுகளுடன் சேர்த்து நோய்த் தொற்று பரவும் மோசமான நாடாக பிரான்ஸ் விளங்குவதாக கூறப்படுகிறது.

இதற்குக் காரணம், இங்குள்ள மக்களிடம் உள்ள குறைவான நோய் எதிர்ப்புத் திறன் எனத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட 10 பேரில் 8 பேர் தடுப்பூசியை இதுவரை போட்டுக் கொண்டதில்லை எனத் தெரியவந்துள்ளது.

ஏனெனில், பிரான்ஸ் மக்களில் பலருக்கு தடுப்பூசிகளின் மீது நம்பிக்கை இல்லை. இதற்கு உதாரணமாக, கடந்த 2016-ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், 41 சதவீத பிரான்ஸ் மக்கள் தடுப்பூசிகளில் நம்பிக்கை இல்லை என்று தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் 83 சதவீதம் பேர் தடுப்பூசிக்கு ஆதரவு தருவதாகவும், தற்போது அதன் மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

இந்த ஆண்டு பிறந்த குழந்தைகளில் 90 சதவீதம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. 

Next Story