சர்சையை ஏற்படுத்திய டொனால்டு டிரம்பின் தீபாவளி வாழ்த்து


சர்சையை ஏற்படுத்திய டொனால்டு டிரம்பின் தீபாவளி வாழ்த்து
x
தினத்தந்தி 14 Nov 2018 11:29 AM GMT (Updated: 14 Nov 2018 11:29 AM GMT)

அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடியது தொடர்பாக, அதிபர் டிரம்ப் வெளியிட்ட டுவீட் சர்சையைக் கிளப்பியுள்ளது.

அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம் என்பது முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் காலத்திலில் இருந்து பின்பற்றப்பட்டு வரும் நடைமுறையாகும். ஆனால் அமெரிக்காவில் கடந்த வாரம் நடைபெற்ற இடைக்காலத் தேர்தல்களின் காரணமாக, அப்போது தீபாவளி கொண்டாடப்படவில்லை.

பின்னர் செவ்வாய்க்கிழமையன்று அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் உள்ள ரூஸ்வெல்ட் அறையில், அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவழியினருடன் அதிபர் ட்ரம்ப் தீபாவளி கொண்டாடினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றுடன் டொனால்டு டிரம்ப்  தனது டுவிட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றை பதிவிட்டிருந்தார். 

அதில் அமெரிக்கா முழுவதும் மற்றும் உலகமெல்லாம் உள்ள புத்த மதத்தினர், சீக்கியர்கள் மற்றும் ஜைனர்கள் ஆகியோரால் கொண்டாடப்படும் விடுமுறை தினமான தீபாவளியினை கொண்டாடுவதற்கு நாங்கள் இன்று கூடினோம். இந்நாளில் லட்சக்கணக்கானோர் தங்கள் குடும்பத்துடன் கூடி விளக்குகளை ஏற்றி புதுவருடத்தை வரவேற்கின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.

டிரம்பின் பதிவில் தீபாவளியினைக் கொண்டாடும் முக்கியமான மற்றும் மிகப் பெரிய மதக்குழுவான இந்துக்களை குறிப்பிடாதது பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியது. 

பின்னர் பல்வேறு டுவிட்டர் பயனாளர்களும் அதனைச் சுட்டிக்காட்டியவுடன் டிரம்ப் தவறைத் திருத்திக் கொண்டு வேறு ஒரு பதிவினை புகைப்படத்துடன் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story