காஸா போர் நிறுத்த முடிவுக்கு எதிர்ப்பு - இஸ்ரேல் ராணுவ மந்திரி ராஜினாமா


காஸா போர் நிறுத்த முடிவுக்கு எதிர்ப்பு  - இஸ்ரேல் ராணுவ மந்திரி ராஜினாமா
x
தினத்தந்தி 14 Nov 2018 4:58 PM GMT (Updated: 14 Nov 2018 5:54 PM GMT)

காஸா போர் நிறுத்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இஸ்ரேல் ராணுவ மந்திரி ராஜினாமா செய்தார்.

ஜெருசலேம்,

பாலஸ்தீனத்தில் காசா முனை பகுதியில் ஹமாஸ் போராளிகளுக்கும், இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே கடந்த 2 நாட்களாக கடும்  போர் நடந்து வந்தது.

இந்த சண்டையில் ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் மீது 460 ராக்கெட்டுகளை வீசினர். பதிலுக்கு அவர்களின் 160 நிலைகளை இஸ்ரேல் ராணுவம் குண்டு போட்டு அழித்தது. இந்த நிலையில் அங்கு சண்டை நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.

எகிப்து நாடு மேற்கொண்ட சமரச முயற்சியைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள சண்டை நிறுத்தத்தை, இஸ்ரேல் கடைப்பிடித்தால், நாங்களும் ஏற்று பின்பற்ற தயார் என ஹமாஸ் போராளிகள் நேற்று அறிவித்தனர்.

இதையொட்டி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ தலைமையில் கூடிய மந்திரிசபையும் சண்டை நிறுத்தத்துக்கு ஆதரவாக முடிவு எடுத்தது. ஆனால் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் ராணுவ மந்திரி அவிக்தார் லீபர்மேன் இன்று ராஜினாமா செய்தார்.

இதுபற்றி அவர் கூறும்போது, ‘‘தேச பாதுகாப்புக்கு நீண்ட கால பாதிப்பை விலையாக கொடுத்து, குறுகிய கால அமைதியை நாடு வாங்குகிறது. ஹமாஸ் போராளிகளுடனான சண்டை நிறுத்தம் என்பது, பயங்கரவாதத்துடன் சரண் அடைவதாகும்’’ என கூறினார்.

மேலும் அவர் ஆளும் கூட்டணியில் இருந்தும் விலகி விட்டார். விரைவில் பொதுத்தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.




Next Story