நாடாளுமன்றத்தில் கடும் அமளிக்கு இடையே ஓட்டெடுப்பு : ராஜபக்சேவுக்கு பெரும் தோல்வி


நாடாளுமன்றத்தில் கடும் அமளிக்கு இடையே ஓட்டெடுப்பு : ராஜபக்சேவுக்கு பெரும் தோல்வி
x
தினத்தந்தி 15 Nov 2018 12:15 AM GMT (Updated: 14 Nov 2018 8:23 PM GMT)

நாடாளுமன்றத்தில் கடும் அமளிக்கு இடையே நடைபெற்ற ஓட்டெடுப்பில் ராஜபக்சேவுக்கு பெரும் தோல்வி ஏற்பட்டது. இதனால் இலங்கை அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கொழும்பு,

இலங்கையில் பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கேவுக்கும், அதிபர் சிறிசேனாவுக்கும் இடையே அதிகார மோதல் முற்றியது.

இதைத் தொடர்ந்து ரனில் விக்ரமசிங்கேவை பிரதமர் பதவியில் இருந்து கடந்த மாதம் 26-ந்தேதி சிறிசேனா நீக்கினார்.

புதிய பிரதமராக முன்னாள் அதிபர் ராஜபக்சேவுக்கு பதவிப்பிரமாணமும் செய்து வைத்தார். அத்துடன் நாடாளுமன்றத்தையும் முடக்கி வைத்த அவரது நடவடிக்கையால் இலங்கை அரசியலில் குழப்பம் ஏற்பட்டது. சிறிசேனாவின் இந்த திடீர் நடவடிக்கைக்கு உள்நாட்டு தலைவர்கள் மட்டுமின்றி அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளும் கண்டனம் தெரிவித்தன. எனவே 14-ந் தேதி (நேற்று) நாடாளுமன்றத்தை கூட்ட அவர் ஒப்புதல் அளித்தார்.

ஆனால் ராஜபக்சே அரசுக்கு போதுமான எம்.பி.க்களின் ஆதரவு கிடைக்கவில்லை. 225 உறுப்பினர் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான 113 எம்.பி.க்களை திரட்ட ராஜபக்சே அணியினரால் முடியவில்லை. இதனால் ராஜபக்சே மட்டுமின்றி அதிபர் சிறிசேனாவும் பெரும் ஏமாற்றம் அடைந்தார்.

எனவே அவர் கடந்த 9-ந்தேதி நாடாளுமன்றத்தை அதிரடியாக கலைத்து உத்தரவு பிறப்பித்தார். மேலும் அடுத்த ஆண்டு (2019) ஜனவரியில் நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவித்தார். இதனால் எதிர்க்கட்சிகளிடையே அதிர்ச்சியும், குழப்பமும் ஏற்பட்டது.

சிறிசேனாவின் இந்த முடிவுக்கு எதிராக ரனிலின் ஐக்கிய தேசிய கட்சி, ஜனதா விமுக்தி பெரமுனா போன்ற கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. மேலும் தேர்தல் கமிஷனர் ஒருவரும் சுப்ரீம் கோர்ட்டை நாடினார்.

இந்த மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நாடாளுமன்றத்தை கலைத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அடுத்த மாதம் (டிசம்பர் 7-ந்தேதி) வரை நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. மேலும் நாடாளுமன்றத்துக்கு உடனடியாக தேர்தல் நடத்துவதற்கான நடவடிக்கைகளுக்கும் தடை விதித்தது.

இதைத்தொடர்ந்து அறிவித்தபடியே நேற்று காலையில் நாடாளுமன்றத்தை சபாநாயகர் கரு ஜெயசூர்யா கூட்டினார். பரபரப்பான சூழலில் சபை கூடியதும் ஜனதா விமுக்தி பெரமுனா கட்சியை சேர்ந்த அனுரா திசநாயகா, விஜிதா ஹெராத் ஆகியோர் ராஜபக்சே அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர்.

ஆனால் இந்த தீர்மானத்தை விவாதத்துக்கு எடுக்க விடாமலும், ஓட்டெடுப்பு நடத்த விடாமலும் தடுப்பதற்காக ராஜபக்சே ஆதரவு எம்.பி.க்கள் சபையில் கடும் கூச்சல், குழப்பத்தில் ஈடுபட்டனர். இதனால் சபையில் பயங்கரமான அமளி நிலவியது.

இந்த களேபரத்துக்கு மத்தியிலும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எடுத்துக்கொண்ட சபாநாயகர், அதன்மீது ஓட்டெடுப்பும் நடத்தினார். இதில் குரல் ஓட்டு மூலம் தீர்மானம் நிறைவேறியது. தீர்மானத்துக்கு ஆதரவாக அதாவது ராஜபக்சேவுக்கு எதிராக 122 எம்.பி.க்கள் வாக்களித்ததாக தெரிகிறது. இதன் மூலம் ராஜபக்சேவுக்கு படுதோல்வி ஏற்பட்டது.

நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்துவதற்கு முன்பாகவே ராஜபக்சே தனது மகனும், எம்.பி.யுமான நமலுடன் நாடாளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றதை சபாநாயகர் கரு ஜெயசூர்யா சபையில் அறிவித்தார். அவர் கூறுகையில், ‘சபையில் நடத்தப்பட்ட குரல் வாக்கெடுப்பின்படி இந்த அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்பதை நான் அங்கீகரிக்கிறேன்’ என அறிவித்தார்.

தொடர்ந்து சபையில் அமளி நிலவியதால், நாடாளுமன்றத்தை இன்றைக்கு (வியாழக்கிழமை) ஒத்திவைத்தார்.

ஆனால் தங்களது விருப்பம் இல்லாமல் நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தியதாக சபாநாயகர் மீது குற்றம் சாட்டிய ராஜபக்சே ஆதரவாளர்கள், இந்த வாக்கெடுப்பை ஏற்க முடியாது என அறிவித்துள்ளனர்.

இது குறித்து ராஜபக்சேவின் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியை சேர்ந்த தினேஷ் குணவர்த்தனே கூறுகையில், ‘நாடாளுமன்றத்தில் பாரம்பரிய முறைப்படி நடத்தும் எலக்ட்ரானிக் வாக்கெடுப்பு முறையை சபாநாயகர் பின்பற்றவில்லை. எனவே நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது நடத்தப்பட்ட இந்த வாக்கெடுப்பு செல்லாது’ எனக்கூறினார்.

அதிபர் சிறிசேனா மற்றும் பிரதமர் ராஜபக்சே தலைமையிலான அரசு தொடர்ந்து இயங்கும் எனக்கூறிய அவர், புதிய அரசின் கீழ் அனைத்து மந்திரிகளும் செயல்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

ஆனால் 122 எம்.பி.க்களின் கையெழுத்து போட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியதன் மூலம், நாட்டில் அக்டோபர் 26-ந் தேதிக்கு முந்தைய நிலைமை அமலுக்கு வந்துள்ளதாக ரனில் விக்ரமசிங்கே கூறியுள்ளார். எனவே தற்போதைய சட்ட விரோத அரசின் உத்தரவுகளை போலீஸ் மற்றும் அரசு அதிகாரிகள் செயல்படுத்தக்கூடாது எனவும் கேட்டுக்கொண்டார்.

அதேநேரம் நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் ராஜபக்சே தோல்வியடைந்திருப்பதன் மூலம், தற்போதைய அரசியல் நெருக்கடியில் ரனில் விக்ரமசிங்கே வெற்றி பெற்றதாக கருத முடியாது. ஏனெனில் நாடாளுமன்றத்தில் அவரது கட்சி பலமாக இருந்தாலும் அங்கு அடுத்த பிரதமரை தேர்வு செய்யும் அதிகாரம் அதிபர் சிறிசேனாவிடமே இருப்பதாக சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

ரனில் விக்ரமசிங்கே அளித்துள்ள ஆதரவு கடிதத்தில் அவரது ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த 102 பேர், தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த 14 பேர் மற்றும் ஜனதா விமுக்தி பெரமுனா கட்சியை சேர்ந்த 6 பேர் என 122 எம்.பி.க்கள் கையெழுத்து போட்டிருப்பதாக தெரிகிறது. முன்னதாக ராஜபக்சேவுக்கு ஆதரவு தெரிவித்த சுமார் 5 எம்.பி.க்கள் நேற்று ரனிலுக்கு ஆதரவளித்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்து நமல் ராஜபக்சே கூறுகையில், ‘நாடாளுமன்றத்தில் கூச்சல் குழப்பத்துக்கு மத்தியில் பிரதமர் யார் என்பதை முடிவு செய்து கூறுமாறு எங்களிடம் சபாநாயகர் கேட்டுக்கொண்டார். ஆனால் எங்களால் சொல்ல முடியவில்லை. ஒரு பிரதமரை தேர்வு செய்ய சபாநாயகர் விரும்பினால், 113 உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை அதிபரிடம் அளிக்கட்டும்’ என்றார்.

இலங்கையில் ராஜபக்சே அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டதையொட்டி நாடாளுமன்றத்துக்கு வெளியே நேற்று ராஜபக்சே மற்றும் விக்ரமசிங்கே ஆதரவாளர்கள் தனித்தனியாக போராட்டங்களை நடத்தினர். இதனால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் ராஜபக்சே அரசு தோல்வியடைந்து இருப்பதன் மூலம், இலங்கை அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. அங்கு பிரதமராக தொடர்வதாக இரு தரப்பும் அறிவித்து இருப்பதால் அரசியல் குழப்பம் நீடிப்பதாகவே தெரிகிறது.

Next Story