அபுதாபி பட்டத்து இளவரசருடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சந்திப்பு


அபுதாபி பட்டத்து இளவரசருடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சந்திப்பு
x
தினத்தந்தி 19 Nov 2018 1:58 AM GMT (Updated: 19 Nov 2018 1:58 AM GMT)

அபுதாபி பட்டத்து இளவரசரை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேற்று சந்தித்து பேசினார்.

அபுதாபி,

பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் இம்ரான் கான் புதிதாக பதவியேற்ற பின்னர் அமீரகத்துக்கு முதன் முறையாக கடந்த செப்டம்பர் மாதம் 19-ந் தேதி வந்தார். அதனை தொடர்ந்து அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் அழைப்பின் பேரில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரண்டாவது முறையாக நேற்று அபுதாபிக்கு வந்தார்.

அபுதாபிக்கு வந்த பாகிஸ்தான் பிரதமருக்கு அமீரகம் சார்பில் 21 குண்டுகள் முழங்க ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதனை பாகிஸ்தான் பிரதமர் ஏற்றுக் கொண்டார். அதன் பின்னர் அவர் அபுதாபியில் உள்ள ஜனாதிபதி அரண்மனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை, அபுதாபி பட்டத்து இளவரசர்  ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் வரவேற்று பேசினார்.

தொடர்ந்து இரு தரப்பு உறவுகள், வர்த்தகம், பொருளாதாரம், முதலீடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து பேசப்பட்டது. மேலும் இரு நாட்டு மக்கள் பயன்படுவதற்கு ஏற்ப வளர்ச்சி திட்டம், முன்னேற்றம் ஆகியவற்றில் ஒருங்கிணைந்து செயல்படுவதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது.
பிராந்திய, சர்வதேச விவகாரங்கள் குறித்து விவாதித்த தலைவர்கள், ஆர்வமுள்ள பல்வேறு விஷயங்கள் குறித்தும் பேசிக் கொண்டனர்.

பேச்சுவார்த்தைக்கு பிறகு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை கவுரவிக்கும் வகையில் அவருக்கும், அவருடன் வந்திருந்த குழுவினருக்கும் அபுதாபி பட்டத்து இளவரசர்  ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் மதிய உணவு விருந்து அளித்தார். அதன் பிறகு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அமீரக துணை அதிபரும், பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூமை சந்தித்து பேசினார். தொடர்ந்து இம்ரான் கான் நேற்று இரவு பாகிஸ்தானுக்கு திரும்பி சென்றார்.

Next Story