பதவி விலக ராஜபக்சே முடிவு : இலங்கையில் 17-ந் தேதிக்குள் புதிய பிரதமர் தேர்வு - அதிபர் சிறிசேனா தகவல்


பதவி விலக ராஜபக்சே முடிவு : இலங்கையில் 17-ந் தேதிக்குள் புதிய பிரதமர் தேர்வு  - அதிபர் சிறிசேனா தகவல்
x
தினத்தந்தி 15 Dec 2018 12:00 AM GMT (Updated: 14 Dec 2018 8:07 PM GMT)

இலங்கையில் 17-ந் தேதிக்குள் புதிய பிரதமர் தேர்வு செய்யப்படுவார் எனவும், ரனில் விக்ரமசிங்கேவை மீண்டும் பிரதமராக்கும் திட்டம் இல்லை எனவும் அதிபர் சிறிசேனா கூறியுள்ளார்.

கொழும்பு,

இலங்கையில் பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கேவை கடந்த அக்டோபர் மாதம் 26-ந் தேதி நீக்கிய அதிபர் சிறிசேனா, முன்னாள் அதிபர் ராஜபக்சேவை புதிய பிரதமராக நியமித்தார். இது அரசியல் நெருக்கடிக்கு வழி வகுத்ததால் நாடாளுமன்றத்தை கலைத்து அடுத்த மாதம் (ஜனவரி) 5-ந் தேதி தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியிட்டார்.ஆனால் இதை சுப்ரீம் கோர்ட்டு அதிரடியாக ரத்து செய்தது. மேலும் ராஜபக்சே மற்றும் அவரது மந்திரிசபை செயல்பட அப்பீல் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது. இந்த தடையை எதிர்த்து ராஜபக்சே தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது.

நாடாளுமன்றம் கலைப்பு நடவடிக்கையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, சிறிசேனாவின் இந்த நடவடிக்கை சட்ட விரோதமானது என நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது.

இதைத்தொடர்ந்து அதிபர் சிறிசேனா தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் அதிபர் ராஜபக்சே உள்ளிட்ட தலைவர்களும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பேசிய சிறிசேனா, சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார்.

இலங்கையின் புதிய பிரதமரை 17-ந் தேதிக்குள் தேர்வு செய்வேன் என தெரிவித்த அவர், ஏற்கனவே பதவி நீக்கம் செய்யப்பட்ட ரனில் விக்ரமசிங்கேவை மீண்டும் பிரதமராக ஒருபோதும் நியமிக்கமாட்டேன் எனவும் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், ‘இலங்கையை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்லும் ரனில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சியின் பிடியில் இருந்து நாட்டை காப்பாற்றவே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. அந்த கட்சிக்கு எதிரான அமைப்புகளை வலுப்படுத்த உறுதி பூண்டுள்ளதுடன், இந்த கட்சியுடன் இணைந்து மீண்டும் அரசை அமைப்பதற்கு முயலக்கூடாது என இலங்கை சுதந்திர கட்சி எம்.பி.க்களையும் கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டார்.

ரனில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவாக இலங்கை நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நம்பிக்கை தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், அவரை மீண்டும் பிரதமராக நியமிக்கமாட்டேன் என அதிபர் சிறிசேனா அறிவித்து இருப்பது ஐக்கிய தேசிய கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே இலங்கையில் பிரதமராக நியமிக்கப்பட்டு உள்ள ராஜபக்சே ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார். இது குறித்து அவரது மகனும், எம்.பி.யுமான நமல் ராஜபக்சே நேற்று தனது டுவிட்டரில், ‘இலங்கையின் நிலைத்தன்மையை உறுதி செய்யும் பொருட்டு, முன்னாள் அதிபர் ராஜபக்சே, நாளை (இன்று) நாட்டு மக்களுக்கு உரையாற்றி விட்டு தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வார்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

முன்னதாக ராஜபக்சே மற்றும் அவரது மந்திரி சபையின் செயல்பாட்டுக்கு தடை விதித்து அப்பீல் கோர்ட்டு அளித்த உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு நேற்று உறுதி செய்தது. இந்த வழக்கின் விரிவான விசாரணை அடுத்த மாதம் நடைபெறும் எனவும் சுப்ரீம் கோர்ட்டு அறிவித்தது.

Next Story