வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் சீனா பயணம்


வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் சீனா பயணம்
x
தினத்தந்தி 8 Jan 2019 2:01 AM GMT (Updated: 8 Jan 2019 2:01 AM GMT)

வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன், ஜி ஜிங்பிங் அழைப்பை ஏற்று சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெய்ஜிங், 

வடகொரியாவின் நெருங்கிய நட்பு நாடாகவும் முக்கிய வர்த்தக கூட்டாளியாகவும் சீனா திகழ்கிறது. இதனால், இரு நாட்டு தலைவர்களும் அடிக்கடி சந்தித்துக் கொள்கின்றனர். கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் முறையாக சீனா சென்ற கிம் ஜாங் அன்,  பிறகு இரண்டு முறை அங்கு சென்று சீன அதிபர் ஜி ஜிங்பிங்கை சந்தித்து பேசினார். 

இந்த நிலையில், 4-வது முறையாக கிம் ஜாங் அன் சீனா பயணம் மேற்கொண்டுள்ளார். சீன அதிபர் ஜி ஜிங்பிங் விடுத்த அழைப்பின் பேரில் கிம் ஜாங் அன் தனது மனைவியுடன் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக கொரிய செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரயில் மூலமாக சீனாவுக்கு கிம் ஜாங் அன் சென்றுள்ளார். 

அமெரிக்கா பொருளாதார தடையை நீக்காவிட்டால் மீண்டும் அணு ஆயுத சோதனையை நடத்துவோம் என்று கிம் ஜாங் அன் சமீபத்தில் மிரட்டல் விடுத்து இருந்த நிலையில்,  சீன அதிபருடனான கிம் ஜாங் அன்னின் சந்திப்பு சர்வதேச அளவில் உற்று நோக்கப்படுகிறது. 

இன்று கிம்ஜோங் உன் 35-வது பிறந்த நாள் என்பதால் அங்கு தனது பிறந்த நாளை கொண்டாடவும் அவர் திட்டமிட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

Next Story