பிரேசிலில் அணை உடைந்ததில் 7 பேர் பலி; 150 பேரை காணவில்லை


பிரேசிலில் அணை உடைந்ததில் 7 பேர் பலி; 150 பேரை காணவில்லை
x
தினத்தந்தி 26 Jan 2019 1:11 AM GMT (Updated: 26 Jan 2019 1:13 AM GMT)

பிரேசில் நாட்டில் இரும்பு தாது சுரங்க வளாகத்தில் இருந்த அணை ஒன்று உடைந்ததில் 7 பேர் பலியாகினர். 150 பேரை காணவில்லை.

புருமடின்ஹோ,

பிரேசில் நாட்டின் பெலோ ஹாரிசன்டே நகருக்கு தென்மேற்கே புருமடின்ஹோ என்ற இடத்தில் இரும்பு தாதுக்களுக்கான சுரங்கம் ஒன்று அமைந்து உள்ளது.  இங்கு பயன்படுத்தப்படாத நிலையில் அணை ஒன்று இருந்து வந்துள்ளது.

இந்த சுரங்கத்தில் 300க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வந்துள்ளனர்.  இந்த நிலையில் திடீரென அணை உடைந்து உள்ளது.  இதனால் அதில் இருந்து பெருக்கெடுத்து ஓடிய நீரானது விளைநிலங்கள் மற்றும் சாலைகள் என அருகிலுள்ள பகுதிகளுக்குள் புகுந்தது.

இதில், டிராக்டர்கள், வீடுகள் மற்றும் பாலங்கள் மண்ணில் புதைந்து போயுள்ளன.  ஹெலிகாப்டர்கள் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.  இதுவரை 100க்கும் மேற்பட்ட சுரங்க தொழிலாளர்கள் மீட்கப்பட்டு உள்ளனர்.

இந்த சம்பவத்தில் 7 பேர் பலியாகி உள்ளனர்.  150 பேரை காணவில்லை.  இதனை தொடர்ந்து சமீபத்தில் அதிபராக பொறுப்பேற்ற ஜெயிர் பொல்சனாரோ தலைமையிலான புதிய அரசு பேரிடர் நிவாரண பணிகளுக்கு உத்தரவிட்டு உள்ளது.

அதிபர் மற்றும் ராணுவ மந்திரி இன்று சம்பவம் நடந்த பகுதிகளுக்கு செல்கின்றனர்.  இந்த பலி எண்ணிக்கை உயர கூடும் என கூறப்படுகிறது.

Next Story