60 மணி நேர ரெயில் பயணம் : வியட்நாம் சென்றடைந்தார் கிம் ஜாங் அன்


60 மணி நேர ரெயில் பயணம் : வியட்நாம் சென்றடைந்தார் கிம் ஜாங் அன்
x
தினத்தந்தி 26 Feb 2019 11:15 PM GMT (Updated: 26 Feb 2019 7:58 PM GMT)

டிரம்ப் உடனான சந்திப்புக்காக கிம் ஜாங் அன், 60 மணி நேரம் ரெயிலில் பயணம் செய்து, வியட்நாம் சென்றடைந்தார்.

ஹனோய், 

வடகொரியாவில் கிம் ஜாங் அன் தலைமை பொறுப்பை ஏற்றதற்கு பின்னர், அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டன.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி இதுபோன்ற சோதனைகளை நடத்தியதால் வடகொரியா உலக நாடுகளின் கண்டனங்களுக்கு உள்ளானது. குறிப்பாக இந்த விவகாரத்தில் வடகொரியாவை அமெரிக்கா நேரடியாக எதிர்த்தது.

அந்நாட்டின் மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தது. அதுமட்டும் இன்றி வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் சாடிக்கொண்டனர்.

இருநாடுகளுக்கும் இடையே போர் மூளும் அளவுக்கு இந்த வார்த்தை மோதல் தீவிரமடைந்தது. இதையடுத்து வடகொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே சமரசம் செய்யும் முயற்சியில் தென்கொரியா இறங்கியது.

அதன் பலனாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் இருநாட்டு தலைவர்களும் சிங்கப்பூரில் உச்சி மாநாடு நடத்தி சந்தித்து பேசினர். அப்போது வடகொரியா அணு ஆயுதமற்ற நாடாக மாறும் என கிம் ஜாங் அன் உறுதி அளித்தார்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த உச்சி மாநாட்டுக்கு பின்னர், இருநாட்டு உறவில் இணக்கமான சூழல் உருவான போதும், அணு ஆயுத ஒழிப்பில் போதுமான முன்னேற்றம் ஏற்படவில்லை.

எனவே இதுகுறித்து விவாதித்து, தீர்வுகாண 2–வது முறையாக சந்தித்து பேச டிரம்ப், கிம் ஜாங் அன் ஆகிய இருவரும் பரபஸ்பர விருப்பம் தெரிவித்தனர்.

அதன்படி இந்த சந்திப்பு வியட்நாமின் தலைநகர் ஹனோயில் பிப்ரவரி மாதம் 27, 28 தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக பெரும்பாலும் ரெயிலிலேயே பயணம் செய்யும் கிம் ஜாங் அன், டிரம்ப் உடனான இந்த சந்திப்புக்காக கடந்த சனிக்கிழமை மாலை தலைநகர் பியாங்காங்கில் இருந்து வியட்நாமுக்கு ரெயிலில் புறப்பட்டார்.

சுமார் 60 மணிநேர பயணத்துக்கு பிறகு 4 ஆயிரம் கிலோ மீட்டரை தாண்டி சீனாவின் எல்லைப்பகுதியை ஒட்டியுள்ள வியட்நாமின் டோங் டாங் நகர ரெயில் நிலையத்தை கிம் ஜாங் அன்னின் ரெயில் நேற்று காலை சென்றடைந்தது. அங்கு அவருக்கு ராணுவ மரியாதையுடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து அங்கிருந்து கார் மூலம் ஹனோய் நகரை நோக்கி கிம் ஜாங் அன் புறப்பட்டார். அங்கு இன்று (புதன்கிழமை) மற்றும் நாளை டிரம்ப் உடனான சந்திப்பு நடக்கிறது.

இதையொட்டி ஹனோய் நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உலக நாடுகள் உற்றுநோக்கும் இரு துருவங்களின் இந்த 2–வது சந்திப்பில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story