நைஜீரியாவில் பரிதாபம்: பள்ளிக்கட்டிடம் இடிந்து விழுந்து 10 மாணவர்கள் பலி


நைஜீரியாவில் பரிதாபம்: பள்ளிக்கட்டிடம் இடிந்து விழுந்து 10 மாணவர்கள் பலி
x
தினத்தந்தி 14 March 2019 10:18 PM GMT (Updated: 14 March 2019 10:18 PM GMT)

நைஜீரியாவில் பள்ளிக்கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 10 மாணவர்கள் பரிதாபமாக பலியாயினர்.

அபுஜா,

நைஜீரியாவின் லாகோஸ் மாகாணத்தில் உள்ள இட்டா பாஜி நகரில் 4 மாடிகளை கொண்ட ஒரு கட்டிடம் இருந்தது. இந்த கட்டிடத்தின் 4-வது தளத்தில் பள்ளிக்கூடம் இயங்கிவந்தது. இங்கு 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்தனர். கட்டிடத்தின் மற்ற தளங்களில் மக்கள் வசித்து வந்தனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் காலை சற்றும் எதிர்பாராத வகையில் திடீரென அந்த 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் பள்ளி மாணவர்கள் உள்பட அனைவரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.

மாணவர்களின் அலறல் சத்தம் அந்த பகுதியையே அதிரவைத்தது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர், போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் என அனைவரும் தீவிர மீட்பு பணியில் இறங்கினர்.

அதற்குள் மாணவர்கள் 10 பேர் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக இறந்தனர். சுமார் 40 மாணவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக, தயார் நிலையில் இருந்த ஆம்புலன்சுகள் மூலம் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கும் 50-க்கும் மேற்பட்ட மாணவர்களை மீட்பதற்கான பணிகள் முழு வீச்சில் நடக்கிறது. விபத்து நேர்ந்து பல மணி நேரம் ஆகிவிட்ட நிலையில் அவர்களில் பலர் உயிர் இழந்திருக்க கூடும் அஞ்சப்படுகிறது.

இதற்கிடையில், இடிந்து விழுந்த 4 மாடி கட்டிடம் சேதமடைந்த கட்டிடமாக அடையாளம் காணப்பட்டு இடிப்பதற்கு முடிவு செய்யப்பட்டிருந்ததாக மாகாண கட்டிட கட்டுப்பாடு முகமை தெரிவித்துள்ளது.


Next Story