பாகிஸ்தானில் கனமழை மற்றும் புழுதி புயல்; 23 பேர் பலி


பாகிஸ்தானில் கனமழை மற்றும் புழுதி புயல்; 23 பேர் பலி
x
தினத்தந்தி 16 April 2019 10:51 AM GMT (Updated: 16 April 2019 10:51 AM GMT)

பாகிஸ்தானில் கனமழை மற்றும் புழுதி புயலுக்கு 23 பேர் பலியாகி உள்ளனர்.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.  இதனால் பல்வேறு நகரங்களில் பல இடங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளது.  மழையுடன் புழுதி புயலும் வீசி வருகிறது.  இதில் மின் கம்பங்கள் மற்றும் மரங்கள் சாய்ந்தன.  பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டு உள்ளன.  இதனால் சாலைகளில் பயணம் செய்வது ஆபத்து நிறைந்த ஒன்றாகி விட்டது.

இந்த சம்பவங்களில் பஞ்சாப் மாகாணத்தில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.  இதனால் 2 பெண்கள் உள்பட 9 பேர் கொல்லப்பட்டனர்.  கைபர் பக்துன்குவா மாகாணத்தில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உள்பட 3 பேர் பலியாகி உள்ளனர்.

இதேபோன்று பலுசிஸ்தான் மாகாணத்தில் கனமழை மற்றும் வெள்ள பெருக்கினை அடுத்து அதிகாரிகள் அவசரகால நிலையை அறிவித்தனர்.  இங்கு குழந்தை உள்பட 9 பேர் பலியாகி உள்ளனர்.

அந்நாட்டில் ஏற்பட்டுள்ள புழுதி புயலில் சிக்கிய 4 மீனவர்களை காணவில்லை.  20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர்.  இதனை தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் மீட்பு படையினர் இணைந்து தேடுதல் மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

Next Story