அடிமைத்தனத்திற்கு பதில் விடுதலையை தேர்வு செய்தவர் திப்பு சுல்தான்; பாகிஸ்தான் பிரதமர் புகழாரம்


அடிமைத்தனத்திற்கு பதில் விடுதலையை தேர்வு செய்தவர் திப்பு சுல்தான்; பாகிஸ்தான் பிரதமர் புகழாரம்
x
தினத்தந்தி 5 May 2019 1:17 AM GMT (Updated: 5 May 2019 1:17 AM GMT)

அடிமைத்தனத்திற்கு பதிலாக விடுதலையை தேர்வு செய்தவர் திப்பு சுல்தான் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் புகழ்ந்து கூறியுள்ளார்.

இந்திய விடுதலை போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவர் திப்பு சுல்தான்.  மைசூரின் புலி என அழைக்கப்பட்ட அவர் சுல்தான் ஐதர் அலியின் மகனாவார்.  புதிய நில வருவாய் திட்டத்தினை அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர்.  இது மைசூரில் பட்டு தொழில் வளர்ச்சி அடைவதற்கு ஊக்கமளித்தது.  தமிழகத்தில் சுஃபி துறவி ஹஸ்ரத் திப்பு என்பவர் வாழ்ந்துள்ளார்.  அவரது பெயரை ஐதர் அலி தனது மகனுக்கு சூட்டினார்.  இதனால் திப்பு சுல்தான் என அவர் அழைக்கப்பட்டார்.

திப்புவின் நினைவு தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது.  இதுபற்றி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், விடுதலையை விரும்பிய ஒரு நபர் திப்பு.  அதற்காக போரிட்டு இறந்தவர்.  அடிமைத்தன வாழ்க்கையை விட விடுதலைக்காக போராடியவர் என புகழ்ந்துள்ளார்.

திப்புவை பற்றி கான் புகழ்ந்துள்ளது இது முதன்முறையல்ல.  கடந்த மார்ச்சில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்ற சூழ்நிலை ஏற்பட்டிருந்தது.  இந்திய துணை ராணுவம் மீது அந்நாட்டை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கம் கொடூர தாக்குதல் நடத்தியது.  இதில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த பதற்றத்திற்கிடையே கான் கூறும்பொழுது, நாம் இரு அரசர்களை பற்றி கேள்விப்பட்டிருப்போம்.  ஆனால், 100 வருடங்கள் குள்ளநரித்தனத்துடன் வாழ்வதற்கு பதில் சிங்கம்போல் ஒரு நாள் வாழ்வது மேலானது என எப்பொழுதும் கூறி வந்த திப்பு சுல்தானே நமது ஹீரோ என கூறினார்.

இந்நிலையில், திப்புவின் நினைவு தினத்தில் அவரை புகழ்ந்து பாகிஸ்தான் பிரதமர் கான் டுவிட்டரில் செய்தி வெளியிட்டு உள்ளார்.

Next Story