ஜப்பானில் பயங்கரம்: மழலையர் பள்ளி மாணவர்கள் கூட்டத்துக்குள் புகுந்த கார் - 2 குழந்தைகள் பரிதாப சாவு


ஜப்பானில் பயங்கரம்: மழலையர் பள்ளி மாணவர்கள் கூட்டத்துக்குள் புகுந்த கார் - 2 குழந்தைகள் பரிதாப சாவு
x
தினத்தந்தி 8 May 2019 10:45 PM GMT (Updated: 8 May 2019 7:45 PM GMT)

ஜப்பானில் மழலையர் பள்ளி மாணவர்கள் கூட்டத்துக்குள் கார் புகுந்த சம்பவத்தில் 2 குழந்தைகள் பரிதாப உயிரிழந்தனர்.

டோக்கியோ,

ஜப்பானின் ஷிகா பிராந்தியத்தில் உள்ள ஓட்சு நகரில் மழலையர் பள்ளி உள்ளது. நேற்று காலை இந்த பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள் 3 பேர், 10-க்கும் மேற்பட்ட மாணவர்களை அழைத்துக்கொண்டு பள்ளிக்கு அருகே உள்ள சாலையோர நடைபாதையில் நடந்து சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது, அந்த சாலையில் வந்து கொண்டிருந்த கார் ஒன்று மற்றொரு கார் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி, தறிக்கெட்டு ஓடிய கார் சாலையோரமாக நடந்து சென்ற மழலையர் பள்ளி மாணவர்கள் கூட்டத்துக்குள் புகுந்தது.

இதில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். சிலர் கார் சக்கரத்தில் சிக்கி நசுங்கினர். இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்த குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களை மீட்டு மருத்துவ மனையில் சேர்த்தனர்.

அங்கு 2 குழந்தைகள் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் 3 குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். விபத்துக்கு காரணமான 2 கார்களை ஓட்டி வந்த 62 மற்றும் 52 வயதான 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

கடந்த மாதம் தலைநகர் டோக்கியோவில் 82 வயதான முதியவர் ஓட்டிய கார் மக்கள் கூட்டத்துக்குள் புகுந்ததில் ஒரு பெண் மற்றும் அவரது 2 வயது குழந்தை பலியானது நினைவுகூரத்தக்கது.

Next Story