அமெரிக்காவின் அழுத்தங்களால் போர் அபாயம் - ஈரான் அதிபர் ருஹானி


அமெரிக்காவின் அழுத்தங்களால் போர் அபாயம் -  ஈரான் அதிபர் ருஹானி
x
தினத்தந்தி 12 May 2019 2:26 PM GMT (Updated: 12 May 2019 2:26 PM GMT)

ஈரான் உடனான அனுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து, அமெரிக்கா விலகியது முதல் இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டு, கடும் மோதல் போக்கு நீடித்து வருகிறது.



ஈரான், வல்லரசு நாடுகளுடன் 2015-ம் ஆண்டு அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டது. வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் என கருதப்பட்ட அந்த ஒப்பந்தம், ஈரான் அணு ஆயுத செயல்பாடுகளை கட்டுக்குள் கொண்டு வரவும், அதற்கு ஏற்ப அந்த நாட்டின் மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடைகளை திரும்பப் பெறவும் வழிவகுக்கிறது.

ஒபாமா காலத்தில் செய்யப்பட்ட இந்த ஒப்பந்தம், அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி டிரம்புக்கு பிடிக்கவில்லை. இதில் அமெரிக்க நலன் கருத்தில் கொள்ளப்படவில்லை என்பது அவரது கருத்து. இதன் காரணமாக கடந்த ஆண்டு திடீரென இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகிக்கொள்வதாக டிரம்ப் அதிரடியாக அறிவித்தார். இது அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே பிரச்சினையை ஏற்படுத்தியது. ஈரான் படையை கருப்பு பட்டியலில் அமெரிக்கா சேர்த்தது.அதற்கு பதிலடியாக அமெரிக்க ராணுவத்தை பயங்கரவாத இயக்கமாக ஈரான் அறிவித்தது.

இந்த சூழலில் ஈரானுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக, அமெரிக்கா தனது போர்க்கப்பல்கள், போர் விமானங்கள் மற்றும் தளவாடங்களை மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்பி உள்ளது.

இந்த நிலையில் அமெரிக்கா, ஈரானுக்கு, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் அழுத்தம் கொடுத்து போருக்கு இட்டு செல்வதாக ஈரான் அதிபர் ஹசன் ருஹானி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:–

1979–ம் ஆண்டு இஸ்லாமிய புரட்சி வெற்றிக்கு பிறகு முதல் முறையாக அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் ஈரான் மிகப்பெரிய அழுத்தத்தை எதிர்கொள்கிறது. ஈராக் உடனான போரின் போதுகூட இதுபோன்ற சர்வதேச பிரச்சினைகளை ஈரான் எதிர்கொள்ளவில்லை. வங்கி பரிவர்த்தனைகள், எண்ணெய் விற்பனை, இறுக்குமதி மற்றும் ஏற்றுமதி ஆகியவற்றில் எந்தவித இடையூறும் ஏற்பட்டது இல்லை. இருந்த போதிலும் அமெரிக்காவின் அழுத்தத்தை ஈரான் ஒருபோதும் ஏற்காது அதற்கு பதிலாக அதற்குரிய தீர்வை காண முயற்சிப்போம் எனக் கூறியுள்ளார். 

Next Story