உங்களுடைய அழுத்தங்களுக்கு அடிபணிய மாட்டோம் அமெரிக்காவிற்கு ஈரான் பதில்


உங்களுடைய அழுத்தங்களுக்கு அடிபணிய மாட்டோம் அமெரிக்காவிற்கு ஈரான் பதில்
x
தினத்தந்தி 22 May 2019 12:52 PM GMT (Updated: 22 May 2019 12:52 PM GMT)

உங்களுடைய அழுத்தங்களுக்கு அடிபணிய மாட்டோம் என அமெரிக்காவிற்கு ஈரான் பதிலை கொடுத்துள்ளது.


ஈரான், வல்லரசு நாடுகளுடன் 2015-ம் ஆண்டு அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டது. வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் என கருதப்பட்ட அந்த ஒப்பந்தம், ஈரான் அணு ஆயுத செயல்பாடுகளை கட்டுக்குள் கொண்டு வரவும், அதற்கு ஏற்ப அந்த நாட்டின் மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடைகளை திரும்பப் பெறவும் வழிவகுக்கிறது.

ஒபாமா காலத்தில் செய்யப்பட்ட இந்த ஒப்பந்தம், அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி டிரம்புக்கு பிடிக்கவில்லை. இதில் அமெரிக்க நலன் கருத்தில் கொள்ளப்படவில்லை என்பது அவரது கருத்து.

இதன் காரணமாக கடந்த ஆண்டு திடீரென இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகிக்கொள்வதாக டிரம்ப் அதிரடியாக அறிவித்தார். இது அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே பிரச்சினையை ஏற்படுத்தியது. ஈரான் படையை கருப்பு பட்டியலில் அமெரிக்கா சேர்த்தது.

அமெரிக்கா விதித்த பொருளாதார தடைகள் ஈரானின் பொருளாதாரத்தை பின்னுக்கு செல்ல வைத்தது. இதுவரை இல்லாத வகையில் ஈரான் நாணய மதிப்பு சரிவை சந்தித்தது. இதனால் வெளிநாட்டு முதலீடுகள் பாதித்தன. ஈரானை புதிய ஒப்பந்தம் போட வைக்க வேண்டும், அந்த ஒப்பந்தம் அணு ஆயுதங்கள் மட்டுமின்றி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் கட்டுப்படுத்தும் வகையில் அமைய வேண்டும் என்று அமெரிக்கா கணக்கு போடுகிறது.

ஈரானும் மிரட்டல் விடுத்து வருகிறது. குறிப்பாக ஹார்முஸ் ஜலசந்தியில் தடையை ஏற்படுத்தி விடுவோம் என்கிறது. இது உலகளாவிய எண்ணெய் போக்குவரத்துக்கு பெரும் தடைச்சுவராக அமைந்து விடும். இந்த நிலையில் ஈரான் மீது கண் வைத்து அமெரிக்கா போர்க்கப்பல்களையும், போர் விமானங்களையும், தளவாடங்களையும் நகர்த்துகிறது. 

ஈரான் மூலம் மத்திய கிழக்கு பகுதியில் உள்ள அமெரிக்க வீரர்களுக்கு ஆபத்து நேரலாம் என்ற எதிர்பார்ப்பில்தான் போர்க்கப்பல்கள், போர் விமானங்கள், தளவாடங்களை அனுப்பி வைப்பதாக அமெரிக்கா கூறுகிறது. ஆனால் இதை ஈரான் நிராகரித்து உள்ளது. இது முட்டாள்தனமான செயல் என ஈரான் விமர்சித்துள்ளது. ஈராக்கில் மட்டும் அமெரிக்காவின் 5 ஆயிரத்து 200 படை வீரர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இருநாடுகள் இடையே போர் பதற்றம் நிலவுகிறது.

இந்த நிலையில், அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு ஈரான் ஒருபோதும் அடிபணியாது என ஈரான் அதிபர் ஹசன் ருஹானி உறுதிபட தெரிவித்துள்ளார். ஹசன் ருஹானி அரசு தொலைக்காட்சியில்  மக்களிடம் உரையாற்றியபோது, ‘‘ஈரானின் உறுதியான வளர்ச்சியை சிதைத்து விடலாம் என்பது எதிரிகளின் மாயை ஆகும். பொருளாதார தடைகளால் உருவாகி இருக்கும் நெருக்கடியான சூழ்நிலையிலும் ஈரான் நிலையான வளர்ச்சியை நோக்கி பயணிக்கிறது. 

இது அமெரிக்காவுக்கு நாம் தெரிவிக்கும் தீர்க்கமான பதில் ஆகும். அந்நாட்டின் எவ்வித அழுத்தங்களுக்கும் ஈரான் ஒருபோதும் அடிபணியாது’’ என குறிப்பிட்டார்.


Next Story