பாகிஸ்தானில் பரபரப்பு: தொலைக்காட்சி விவாதத்தில் அடிதடி - சமூக வலைத்தளங்களில் ‘வைரலாக’ பரவும் வீடியோ


பாகிஸ்தானில் பரபரப்பு: தொலைக்காட்சி விவாதத்தில் அடிதடி - சமூக வலைத்தளங்களில் ‘வைரலாக’ பரவும் வீடியோ
x
தினத்தந்தி 26 Jun 2019 4:29 AM GMT (Updated: 26 Jun 2019 10:36 PM GMT)

பாகிஸ்தான் நாட்டு தொலைக்காட்சி ஒன்றில் நேரலையாக நடந்த விவாத நிகழ்ச்சி மல்யுத்தமாக மாறிய காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியது.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் ‘பாக் நியூஸ் நெட்வொர்க்’ என்னும் தொலைக்காட்சியில் ‘நியூஸ் லைன் வித் அப்தாப் முகேரி’ எனும் விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆளும் கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவரான மஸ்ரூர் அலி சியால் மற்றும் பிரபல பத்திரிகையாளரும், கராச்சி பத்திரிகை சங்கத்தலைவருமான இம்தியாஸ் கான் உள்ளிட்டோர் பங்கேற்று காரசாரமாக விவாதம் நடத்தி கொண்டிருந்தனர்.

அப்போது, மஸ்ரூர் அலி சியாலிடம் அவரது கட்சி குறித்து இம்தியாஸ் கான் சரமாரியாக கேள்வி எழுப்பியதால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மஸ்ரூர் அலி சியால், இம்தியாஸ் கானை தாக்கினார். இதனால் இருவருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டு, விவாத நிகழ்ச்சி மல்யுத்த களமாக மாறியது. பின்னர் நிகழ்ச்சியில் பேச வந்திருந்த மற்ற பேச்சாளர்கள் 2 பேர் இருவரையும் பிரித்து சமாதானம் செய்தனர்.

முன்னதாக இருவரும் சண்டைபோட்ட காட்சி நேரலையில் அப்படியே ஒளிபரப்பானது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதுவரை 1 லட்சத்து 60 ஆயிரம் பேர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர். வலைத்தள ஆர்வலர்கள், மஸ்ரூர் அலி சியாலின் செயல் கண்டிக்கத்தக்கது என கூறி அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் இம்ரான்கானை வலியுறுத்தி வருகின்றனர்.


Next Story