சிலி, அர்ஜென்டினா உள்ளிட்ட நாடுகளில் சூரிய கிரகணம் -இந்திய நேரப்படி இரவு 10.24 மணிக்கு தொடங்குகிறது


சிலி, அர்ஜென்டினா உள்ளிட்ட நாடுகளில் சூரிய கிரகணம் -இந்திய நேரப்படி இரவு 10.24 மணிக்கு தொடங்குகிறது
x
தினத்தந்தி 2 July 2019 11:11 AM GMT (Updated: 2 July 2019 12:13 PM GMT)

சிலி, அர்ஜென்டினா உள்ளிட்ட நாடுகளில் சூரிய கிரகணம். இந்திய நேரப்படி இரவு 10.24 மணிக்கு தொடங்குகிறது.

சிலி,

சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் போது, கிரகணம் ஏற்படுகிறது. சூரியனின் ஒளி கதிர்களை சந்திரன் மறைக்கும் அரிய நிகழ்வே சூரிய கிரகணம் ஆகும். இந்த அரிய நிகழ்வு இன்று நிகழ்கிறது.

சிலி, அர்ஜென்டினா மற்றும் தென் பசிபிக் பெருங்கடல் அருகில் உள்ள பகுதிகளில் இந்த சூரிய கிரகணத்தை தெளிவாக காண முடியும். இதனால் தெற்கு பசிபிக் நாடுகள் சில மணி நேரங்களுக்கு இருளில் மூழ்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும் மொத்தமாக 4 நிமிடங்கள் 33 வினாடிகளுக்கு மட்டுமே முழுமையான சூரிய கிரகணம் நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் நிகழவிருக்கும் முதல் சூரிய கிரகணம் இதுவாகும்.

சூரிய கிரகணம் சிலி நாட்டில் லா செரீனா என்ற இடத்தில் அந்நாட்டு நேரப்படி மதியம் 3.22 மணிக்கு தொடங்கியது. சூரிய அஸ்தமனத்தில் தொடங்கி மாலை 5.46 மணிக்கு சூரிய கிரகணம் முழுமையடையும். இந்திய நேரப்படி இரவு 10.24 மணிக்கு தொடங்கி மறுநாள் அதிகாலை 12.52 மணிக்கு முழுமை அடைந்து அதிகாலை 2.14 மணிக்கு கிரகணம் முடிவடையும். இரவாக இருப்பதால் இந்தியாவில் இவ்விந்தையை காண முடியாது என்பது வருத்தமான செய்தி. 

குறிப்பிட்ட ஒரே இடத்தில் முழு சூரிய கிரகணம் 375 வருடங்களுக்கு ஒரு முறை தான் தோன்றும். சூரிய கிரகணம் முழுமை அடையும் காலம் 2 வினாடிகளில் இருந்து 7 நிமிடம் 30 வினாடிகள் மட்டுமே நீடிக்கும். 

21-ம் நூற்றாண்டில் அதிக நேரம் தோன்றிய முழு சூரிய கிரகணம் 2009-ம் ஆண்டு ஜூலை மாதம் 22-ம் நாள் 6 நிமிடம் 39 வினாடிகளுக்கு முழுமையாக நீடித்திருந்தது. 7 நிமிடம் 24 வினாடி அளவிற்கு அதிக நேரம் நிகழும் அடுத்த முழு சூரிய கிரகணம் வருகிற 2,186-ம் ஆண்டு ஜூலை மாதம் 22-ம் நாள் தோன்றும் என விஞ்ஞானிகள் கணித்து இருக்கிறார்கள்.

Next Story