‘கொள்ளையடித்த பணத்தை கொடுத்துவிட்டு வெளிநாடு செல்லுங்கள்’; முன்னாள் ஆட்சியாளர்களுக்கு இம்ரான்கான் கண்டனம்


‘கொள்ளையடித்த பணத்தை கொடுத்துவிட்டு வெளிநாடு செல்லுங்கள்’; முன்னாள் ஆட்சியாளர்களுக்கு இம்ரான்கான் கண்டனம்
x
தினத்தந்தி 3 July 2019 11:15 PM GMT (Updated: 3 July 2019 7:54 PM GMT)

‘கொள்ளையடித்த பணத்தை கொடுத்துவிட்டு வெளிநாடு செல்லுங்கள்’ என முன்னாள் ஆட்சியாளர்களுக்கு இம்ரான்கான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அந்த நாட்டுக்கு கடன் வழங்குவதாக கூறிய சர்வதேச நிதியம், ஆசிய வங்கி உள்ளிட்டவை இதுகுறித்து, மறுபரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நாட்டின் நிதி நெருக்கடி தொடர்பாக முன்னாள் ஆட்சியாளர்களை பிரதமர் இம்ரான்கான் கடுமையாக விமர்சித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது இதுகுறித்து அவர் பேசியதாவது:-

முன்னாள் ஜனாதிபதி அலி சர்தாரி மற்றும் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் போன்றவர்களுக்கு பாகிஸ்தான் அரசு எந்த பொது மன்னிப்பும் வழங்காது. அவர்கள் பாகிஸ்தான் மக்களிடம் கொள்ளையடித்த பணத்தைத் திரும்பத் தந்துவிட்டு இந்த நாட்டை விட்டு வெளியேறட்டும்.

2 ஆட்சியாளர்களின் மகன்களும் தங்களின் தந்தைகளை வெளிநாட்டுக்கு மருத்துவ சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல, நட்பு நாடுகள் மூலம் எங்களுக்கு அழுத்தம் தருகின்றனர். அவர்கள் எங்கு வேண்டுமானாலும் போகட்டும்.

ஆனால், அதற்கு முன்னால் கொள்ளையடித்த பணத்தைத் திரும்பத்தர வேண்டும். அப்படித் தரவில்லை என்றால் அவர்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேற நான் அனுமதிக்க மாட்டேன்.  இவ்வாறு அவர் பேசினார்.

Next Story