பெண் எம்.பி.க்கள் குறித்து இனவெறி கருத்து: டிரம்புக்கு எதிராக கண்டன தீர்மானம் - அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேறியது


பெண் எம்.பி.க்கள் குறித்து இனவெறி கருத்து: டிரம்புக்கு எதிராக கண்டன தீர்மானம் - அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேறியது
x
தினத்தந்தி 17 July 2019 1:16 PM GMT (Updated: 17 July 2019 7:35 PM GMT)

ஜனநாயக கட்சியை சேர்ந்த பெண் எம்.பி.க்கள் குறித்து இனவெறி கருத்து கூறிய விவகாரத்தில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்புக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வாஷிங்டன்,

‘அமெரிக்கா அமெரிக்க மக்களுக்கே’ என்ற கொள்கையை தீவிரமாக கடைபிடித்து வரும் டிரம்ப், பிற நாடுகளில் பிறந்து அமெரிக்காவில் குடியுரிமை பெற்றவர்கள் மீது இனவெறி கருத்துகளை கூறி சர்ச்சையில் சிக்கி வருகிறார். அந்த வகையில், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியை சேர்ந்த 4 பெண் எம்.பி.க்களை விமர்சித்து டிரம்ப், டுவிட்டரில் பதிவிட்ட கருத்து அமெரிக்க அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

“பேரழிவு நாடுகளில் இருந்து வந்த ஜனநாயக கட்சி பெண் எம்.பி.க்கள் உலகின் சக்திவாய்ந்த அமெரிக்க அரசை விமர்சிக்கிறார்கள். அவர்கள் எங்கிருந்து வந்தார்களோ அங்கேயே திரும்பி செல்லவேண்டும். அவர்களின் சொந்த நாடுகளில் உள்ள குறைகளை தீர்த்துவிட்டு, இங்கு வந்து கருத்து சொல்லலாம்” என அவர் டுவிட்டரில் பதிவிட்டார்.

ஆப்பிரிக்க நாடுகளை பூர்வீகமாக கொண்ட ரஷிதா டலீப், ஒகாசியோ கோர்டெஸ், ஐயானா பிரெஸ்லி மற்றும் இல்ஹான் உமர் ஆகியோரையே மறைமுகமாக குறிப்பிட்டு டிரம்ப் இந்த கருத்தை கூறினார். டிரம்பின் இந்த இனவெறி கருத்துக்கு எதிராக பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் வலுத்தன.

இந்த நிலையில் இனவெறி கருத்தை கூறிய விவகாரத்தில் டிரம்புக்கு எதிராக அமெரிக்க நாடாளுமன்றத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜனநாயக கட்சியினரின் ஆதிக்கம் மிகுந்த பிரதிநிதிகள் சபையில் டிரம்புக்கு எதிரான தீர்மானம் கொண்டுவரப்பட்டு ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது.

இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 240 வாக்குகளும், எதிராக 187 வாக்குகளும் கிடைத்தன. ஜனநாயக கட்சியினருடன் டிரம்பின், குடியரசு கட்சியை சேர்ந்த 4 உறுப்பினர்களும், பிரதிநிதிகள் சபையின் ஒரு சுயேச்சை உறுப்பினரும் கண்டன தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.

தங்கள் நிறம் குறித்த அச்சத்தை புதிய இளம் அமெரிக்கர்களிடம் டிரம்பின் இந்த கருத்துகள் அதிகரித்துள்ளன என்று அந்த கண்டன தீர்மானத்தில் தெரிவிக்கப்பட் டது. மேலும் “டிரம்பின் இந்தக் கருத்து பயங்கரமானது. நிச்சயம் மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தக்கூடியது. எனவே இது சுட்டிக்காட்டப்பட வேண்டும்” என்று நாடாளுமன்ற உறுப்பினர் டாம் மலின்னவ்கி தெரிவித்தார்.

தனக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறித்து டிரம்ப் டுவிட்டரில், “என்னுடைய கருத்துகள் இனவெறியை தூண்டவில்லை. என்னுடைய உடலில் இனவெறியும் இல்லை. இது ஜனநாயக கட்சியின் விளையாட்டு. இதில் குடியரசுக்கட்சி தனது பலவீனத்தை காட்டக்கூடாது. அவர்களது சதியில் விழக்கூடாது” என தெரிவித்துள்ளார்.

மேலும், “ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை பற்றி நான் கூறிய கருத்துகள் தொடர்பாக பிரதிநிதிகள் சபையில் நடந்த வாக்கெடுப்பில் குடியரசு கட்சி எவ்வளவு ஒற்றுமையாக இருந்தது என்பதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது” எனவும் அவர் கூறினார்.

ஆனாலும் ஜனநாயக கட்சியை சேர்ந்த பெண்களை அமெரிக்காவை விட்டு வெளியேற அறைக்கூவல் விடுத்த டிரம்ப் தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளார்.

Next Story