ஆப்கானிஸ்தானில் தலீபான் தாக்குதலில் பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு


ஆப்கானிஸ்தானில் தலீபான் தாக்குதலில் பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு
x
தினத்தந்தி 3 Sep 2019 6:53 AM GMT (Updated: 3 Sep 2019 6:53 AM GMT)

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் தாக்குதலில் பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வடைந்து உள்ளது.

காபூல்,

ஆப்கானிஸ்தான் நாட்டில் பல வருடங்களாக நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் மற்றும் அமெரிக்க படைகளை திரும்ப பெறுவதற்காக தலீபான்களுடன் அமெரிக்க அரசு, அமைதி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.  பல சுற்றுகளாக நடந்து வரும் இந்த பேச்சுவார்த்தையில், இதுவரை முடிவு எட்டப்படவில்லை.

இதனிடையே, தலீபான் அமைப்பு தலைவர்களுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்க சிறப்பு தூதர் ஜல்மே கலீல்ஜாத் ஆப்கானிஸ்தானுக்கு வருகை தந்துள்ளார்.  அவரிடம் தோலோ நியூஸ் என்ற அந்நாட்டின் தொலைக்காட்சி நிலையம் பேட்டி எடுத்து கொண்டிருந்தது.

இந்த நிலையில், கிரீன் வில்லேஜ் என்ற பகுதியருகே குடியிருப்பு பகுதியை இலக்காக கொண்டு வெடிகுண்டுகள் நிரம்பிய கார் ஒன்றை வெடிக்க செய்து தாக்குதல் நடத்தப்பட்டது.  கிரீன் வில்லேஜில் சர்வதேச அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.

தொடர்ந்து அங்கு நடந்த 2வது வெடிகுண்டு தாக்குதலை அடுத்து துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டு உள்ளது.  இதில் அருகிலுள்ள பெட்ரோல் நிலையம் ஒன்று தீப்பிடித்து எரிந்தது.  நேற்றிரவு நடந்த இந்த தாக்குதலில் வான்வரை புகை கிளம்பி சென்றது.

இந்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வடைந்து உள்ளது.  119 பேர் காயமடைந்து உள்ளனர்.  அனைத்து பொதுமக்களும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர் என உள்துறை அமைச்சக செய்தி தொடர்பு அதிகாரி ரஹிமி கூறியுள்ளார்.

Next Story