எண்ணெய் நிறுவனம் மீது தாக்குதல்; ஈரான் தொடர்பு பற்றிய சான்று இன்று வெளியீடு: சவுதி அரசு


எண்ணெய் நிறுவனம் மீது தாக்குதல்; ஈரான் தொடர்பு பற்றிய சான்று இன்று வெளியீடு:  சவுதி அரசு
x
தினத்தந்தி 18 Sep 2019 5:40 AM GMT (Updated: 18 Sep 2019 5:40 AM GMT)

எண்ணெய் நிறுவனம் மீது நடந்த தாக்குதலுக்கு ஈரானுக்கு உள்ள தொடர்பு பற்றிய சான்றுகள் இன்று வெளியிடப்படும் என சவுதி அரேபியா கூறியுள்ளது.

தோஹா,

உலக அளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் சவுதி அரேபியா முன்னணியில் இருந்து வருகிறது. அங்கு புக்யாக் நகரில் அமைந்துள்ள அப்காய்க் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் அருகில் குரெய்ஸ் நகரில் உள்ள எண்ணெய் வயல் ஆகியவை மீது கடந்த 14ந்தேதி ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தினர்.

அராம்கோ நிறுவனத்துக்கு சொந்தமான இந்த சுத்திகரிப்பு ஆலை மற்றும் எண்ணெய் வயலில் நடந்த தாக்குதலின் பின்னணியில் ஈரான் இருப்பதாக குற்றம் சாட்டி உள்ள அமெரிக்கா, அந்த நாட்டுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்கப்போவதாக மிரட்டி உள்ளது.

இந்த எதிர்வினைகள் ஒருபுறம் இருக்க, விமான தாக்குதலால் சவுதி எண்ணெய் உற்பத்தி துறை நிலைகுலைந்து போயுள்ளது. தங்கள் எண்ணெய் உற்பத்தியை அந்த நாடு பாதியாக குறைத்து உள்ளது. அதன்படி நாளொன்றுக்கு சுமார் 57 லட்சம் பீப்பாய் எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்த உற்பத்தி பாதிப்பு சர்வதேச அளவில் எதிரொலித்தது. குறிப்பாக கச்சா எண்ணெய் விலை 10 சதவீதத்துக்கும் மேல் உயர்ந்தது. இது இந்திய பங்குச்சந்தையிலும் எதிரொலித்தது.  இந்த நிலையில், எண்ணெய் உற்பத்தியில் சவுதி அரேபியா வெகுவிரைவில் பழைய நிலைக்கு திரும்பும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.  சவுதி அரேபியாவில் எண்ணெய் உற்பத்தி 2 முதல் 3 வாரங்களில் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும் என அந்நாட்டின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதனிடையே, அந்நாட்டின் அல் ஏக்பரியா என்ற அரபு செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலில், சவுதி அரேபியாவின் பாதுகாப்பு அமைச்சக செய்தி தொடர்பு அதிகாரி இன்று நடத்தும் செய்தியாளர் சந்திப்பில் எண்ணெய் நிறுவனம் மீது நடந்த தாக்குதல் பற்றி விவரிக்கிறார் என தெரிவித்து உள்ளது.

இதில், சவுதி அராம்கோ நிறுவனம் மீது நடந்த தாக்குதலுக்கு ஈரானிய அரசின் தொடர்பு பற்றிய சான்றுகள் வெளியிடப்படும்.  தாக்குதலுக்கு பயன்பட்ட ஈரான் ஆயுதங்கள் பற்றியும் தகவல் வெளியிடப்பட உள்ளது.

Next Story