சவுதி எண்ணெய் ஆலையில் தாக்குதல் நடத்தியது ஏமன் கிளர்ச்சியாளர்களே : ஈரான் அதிபர் தகவல்


சவுதி எண்ணெய் ஆலையில் தாக்குதல் நடத்தியது ஏமன் கிளர்ச்சியாளர்களே : ஈரான் அதிபர் தகவல்
x
தினத்தந்தி 18 Sep 2019 9:50 AM GMT (Updated: 18 Sep 2019 10:54 AM GMT)

சவுதி எண்ணெய் ஆலையில் ஏமன் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியதாக ஈரான் அதிபர் தெரிவித்துள்ளார்.

தெஹ்ரான், 

உலக அளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் சவுதி அரேபியா முன்னணியில் இருந்து வருகிறது. அங்கு புக்யாக் நகரில் அமைந்துள்ள அப்காய்க் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் அருகில் குரெய்ஸ் நகரில் உள்ள எண்ணெய் வயல் ஆகியவை மீது கடந்த 14-ந் தேதி ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தினர்.

அராம்கோ நிறுவனத்துக்கு சொந்தமான இந்த சுத்திகரிப்பு ஆலை மற்றும் எண்ணெய் வயலில் நடந்த தாக்குதலின் பின்னணியில் ஈரான் இருப்பதாக குற்றம் சாட்டி உள்ள அமெரிக்கா, அந்த நாட்டுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்கப்போவதாக மிரட்டி வருகிறது. 

இந்த நிலையில், சவுதி அரேபிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது தாக்குதல் நடத்தியது ஏமன் கிளர்ச்சியாளர்களே என்று ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி தெரிவித்துள்ளார். ஏமனில் அரசு படைக்கு அமெரிக்கா ஆதரவு அளிப்பதற்கு பதிலடியாக எச்சரிக்கை விடுக்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக ரவுகானி  தெரிவித்து இருக்கிறார். 

முன்னதாக, கடந்த சனிக்கிழமை அமெரிக்கா, ஈரானில் இருந்து சவுதி அரேபிய எண்ணெய் ஆலை மீது தாக்குதலை நடத்தி இருப்பதாக இதற்கு ஆதாரம் இருப்பதாகவும் கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.

சவுதி அரசு தலைமையில், மேற்கத்திய நாடுகளின் ஆதரவு பெற்ற ராணுவப் படை ஏமன் அரசுக்கு ஆதரவாகச் செயல்படுகிறது. ஏமன் அரசை எதிர்த்துப் போரிட்டு வரும் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆதரவளிக்கிறது.

Next Story