சீனாவில் பாலம் இடிந்து விழுந்து 3 பேர் பலி


சீனாவில் பாலம் இடிந்து விழுந்து 3 பேர் பலி
x
தினத்தந்தி 11 Oct 2019 1:26 PM GMT (Updated: 11 Oct 2019 8:58 PM GMT)

சீனாவில் நெடுஞ்சாலையில் உள்ள பாலம் இடிந்து வாகனங்கள் மீது விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர்.

பீஜிங்,

சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள வுக்சி நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் இரவு இந்த மேம்பாலத்தில் 3 கார்கள் மற்றும் 2 லாரிகள் சென்று கொண்டிருந்தன. மேம்பாலத்துக்கு கீழே உள்ள சாலையிலும் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன.

அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் மேம்பாலம் திடீரென இடிந்து சாலையில் சென்ற 2 கார்கள் மற்றும் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார் மீது விழுந்தது. அதே போல், மேம்பாலத்தில் சென்ற 3 கார்கள் மற்றும் 2 லாரிகளும் சாலையில் விழுந்தன. இந்த கோர விபத்தில் சாலையில் சென்ற 2 கார்களில் இருந்த 3 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் கிரேன், பொக்லைன் எந்திரம் உள்ளிட்டவற்றின் உதவியுடன் இடிபாடுகளை அகற்றி வாகனங்களுக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், லாரி ஒன்று அனுமதிக்கப்பட்டதை விட அதிகளவில் சுமை ஏற்றி சென்றதால், மேம்பாலம் இடிந்து விழுந்ததாக தெரிவித்துள்ளனர். எனினும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Next Story