கலிபோர்னியாவில் பயங்கர காட்டுத்தீ: 1 லட்சம்பேர் வெளியேற்றம்


கலிபோர்னியாவில் பயங்கர காட்டுத்தீ: 1 லட்சம்பேர் வெளியேற்றம்
x
தினத்தந்தி 12 Oct 2019 11:00 PM GMT (Updated: 12 Oct 2019 8:26 PM GMT)

கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத்தீ காரணமாக 1 லட்சம்பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

லாஸ் ஏஞ்சல்ஸ்,

அமெரிக்காவில் தெற்கு கலிபோர்னியாவில் சான் பெர்னாண்டோ பள்ளத்தாக்கில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் கடந்த வியாழக்கிழமை இரவு தீப்பிடித்துக் கொண்டது. நேற்று தீ பெருமளவில் பரவியது. மணிக்கு 800 ஏக்கர் காட்டுப்பகுதியை தீ சாம்பலாக்கி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆயிரம் தீயணைப்பு வீரர்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்களில் இருந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகில் உள்ள பகுதிகளில் வசிக்கும் சுமார் ஒரு லட்சம்பேர் வெளியேற்றப்பட்டனர்.

இருப்பினும், 76 வீடுகளும், 31 கட்டிடங்களும் காட்டுத்தீயில் சேதமடைந்துள்ளன. இதுவரை 7 ஆயிரத்து 542 ஏக்கர் நிலப்பரப்பு சாம்பலாகி விட்டது. தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

Next Story