குர்துக்களுக்கு ஆதரவாக ரஷ்யா ; துருக்கி அதிபருடன் விரைவில் பேச்சுவார்த்தை


குர்துக்களுக்கு ஆதரவாக ரஷ்யா ; துருக்கி அதிபருடன் விரைவில் பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 17 Oct 2019 8:09 AM GMT (Updated: 17 Oct 2019 8:09 AM GMT)

குர்துக்களுக்கு ஆதரவாக ரஷ்யா படை வீரர்களை சிரியாவுக்கு அனுப்பி வைத்துள்ளது. விரைவில் துருக்கி அதிபருடன் ரஷ்யா பேச்சுவார்த்தை நடத்துகிறது.

மாஸ்கோ

சிரியாவின் வடகிழக்கே வசிக்கும் குர்துக்களுக்கு எதிராக துருக்கி ராணுவம் கடந்த ஒரு வாரமாக சண்டையிட்டு வருகிறது.

இதன் காரணமாக துருக்கி - சிரியா எல்லையில் வசிக்கும் லட்சத்துக்கும் மேற்பட்ட குர்து இன மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

போரை நிறுத்த குர்து-சிரியா ராணுவம் இணையும்  என அண்மையில் ரஷ்யா கூறியது. இதைத்தொடர்ந்து, வடக்கு சிரியா முழுவதும் ரஷ்யா, சிரியா மற்றும் குர்து ஜனநாயகப்படையின் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.

மேலும் அலேப்போ மாகாணத்தின் மன்பிஜ் நகரை துருக்கி தாக்கவுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளதால் மன்பிஜ் நகரம், ரக்பா மாகாணத்தில் உள்ள தப்கா நகரங்களில் சிரியா தனது ராணுவத்தை குவித்து, ராணுவ தளத்தையும் அமைத்து தாக்குதலை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளது.

இந்த நிலையில், அமெரிக்கா இல்லாத வெற்றிடத்தை நிரப்புவதற்காக ரஷ்யா களத்தில் இறங்கியுள்ளது. குர்துக்களுக்கு ஆதரவாக சண்டையிடுவதற்காக தங்கள் நாட்டு படை வீரர்களை சிரியாவுக்கு ரஷ்யா அனுப்பி வைத்துள்ளது.

இந்த நிலையில் வடகிழக்கு சிரியாவில் அங்காராவின் இராணுவத் தாக்குதல் தொடர்பாக துருக்கி அதிபர்  தயிப் எர்டோகன்  விளாடிமர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்த  உள்ளார். இதற்கான ரஷ்ய அதிபரின் அழைப்பை எர்டோகன் ஏற்றுக்கொண்டார்.

இரு தலைவர்களுக்கிடையிலான சந்திப்பு அக்டோபர் 22 ஆம் தேதி சோச்சியின் கருங்கடல் ரிசார்ட்டில் நடைபெறும் என்று எர்டோகன் அலுவலகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

Next Story