வங்காளதேசம்: ரோஹிங்கியா மக்களை வங்கக் கடலில் உள்ள தீவிற்கு இடமாற்றம் செய்ய முடிவு


வங்காளதேசம்: ரோஹிங்கியா மக்களை வங்கக் கடலில் உள்ள தீவிற்கு இடமாற்றம் செய்ய முடிவு
x
தினத்தந்தி 21 Oct 2019 7:57 AM GMT (Updated: 21 Oct 2019 7:57 AM GMT)

வங்காளதேசத்தில் அகதிகள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா மக்களை வங்கக்கடலில் உள்ள தீவிற்கு இடமாற்றம் செய்ய வங்காளதேச அரசு முடிவு செய்துள்ளது.

டாக்கா,

மியான்மரில் கடந்த 2017 ஆம் ஆண்டு ரோஹிங்கியா மக்களுக்கு எதிராக நிகழ்ந்த ராணுவ அடக்குமுறையால், சுமார் 7,40,000 பேர் மியான்மரில் இருந்து வங்கதேசத்திற்கு இடம்பெயர்ந்தனர். வங்கதேசத்தில் ஏற்கனவே 2,00,000 ரோஹிங்கியாக்கள் அகதிகள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். 

இதனையடுத்து வங்கதேசத்தின் தெற்கு கடற்கரையோரம் தற்போது சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான ரோஹிங்கியாக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு நிலவி வரும் ஜன நெருக்கடியை குறைக்க வங்கதேச அரசு முடிவு செய்துள்ளது. இதன் முதற்கட்டமாக சில ஆயிரம் ரோஹிங்கியா மக்களை வங்கக் கடலில் உள்ள ஒரு தீவில் தங்கவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த தீவிற்கு அருகில் உள்ள ஹதியா என்ற தீவு மக்கள் கூறுகையில், “வருட இறுதியில் மழைக்காலைத்தின் போது அந்த தீவு கடும் வெள்ளத்தால் பாதிக்கப்படும். அந்த நேரத்தில் யாரும் அங்கே செல்ல முடியாது. அந்த தீவு மக்கள் வாழ்வதற்கு ஏற்ற இடம் அல்ல” என்று தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அந்த தீவில் மக்கள் வாழ்வதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக வங்கதேச அரசு தெரிவித்துள்ளது. பருவமழைக் காலங்களில் கடல் அலைகளில் இருந்து பாதுகாப்பதற்காக 9 அடி உயர தடுப்பு சுவர் எழுப்பப்பட்டுள்ளதாகவும் விரைவில் ரோஹிங்கியா குழு தலைவர்கள் அங்கு சென்று பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story