ஜிம்பாப்வேயில் சோகம்: பசி, பட்டினியால் 55 யானைகள் சாவு


ஜிம்பாப்வேயில் சோகம்: பசி, பட்டினியால் 55 யானைகள் சாவு
x
தினத்தந்தி 23 Oct 2019 10:00 PM GMT (Updated: 23 Oct 2019 9:40 PM GMT)

ஜிம்பாப்வேயில் பசி, பட்டினியால் 55 யானைகள் பரிதாபமாக உயிரிழந்தது.

ஹராரே,

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வேவில் கடுமையாக பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதனால் அந்த நாட்டின் பஞ்சம், பசி, பட்டினி தலைவிரித்தாடுகிறது. அந்த நாட்டின் மக்கள் தொகையில் 3-ல் ஒரு பங்கினர் உணவு இன்றி தவித்து வருகின்றனர்.

அந்நாட்டில் ஏற்பட்டுள்ள பஞ்சம், விலங்குகளையும் விட்டு வைக்கவில்லை. கடந்த 2 மாதத்தில் அங்கு 55 யானைகள் பசியால் உயிரிழந்து உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஜிம்பாப்வேவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஹவாங்கே தேசிய பூங்காவில்தான் இந்த சோகம் அரங்கேறி உள்ளது.

15 ஆயிரம் யானைகள் மட்டுமே தங்கும் இடத்தில் தற்போது 50 ஆயிரத்திற்கும் அதிகமான யானைகள் தங்க வைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக யானைகளுக்கு உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அத்துடன் பூங்காவில் உள்ள நீர்நிலைகளும் வறண்டுவிட்டன.

எனவே பசிக்கொடுமையால் யானைகள் கூட்டமாக செத்து மடிகின்றன. இப்படி கடந்த 2 மாதத்தில் மட்டும் 55 யானைகள் இறந்துள்ளன. யானைகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அவற்றை வெளிநாடுகளில் இருக்கும் உயிரியல் பூங்காக்களுக்கு விற்பது மட்டுமே ஒரே தீர்வு என ஹவாங்கே தேசிய பூங்காவின் அதிகாரிகள் கூறுகின்றனர்.

Next Story